பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

17

மண்டபங்கள் திசை திசைதோறும் காண்பவர் கண்களுக்கு விருந்தளித்தன. அரண்மனையடுத்து ஆரவாரக்கலை ஆய்வுக் கூடங்களும்,ஆரவாரக்கடைத்தெருக்களருகே இசையரங்குகளும், நெல் கோதுமைக் குவியல்களை யடுத்து முத்துமணிக் குவைகளும் நகரில் வேற்றுமையின்றி ஒருங்கு குலவின.

அப்துர் ரசாக்குக் கண்கூடாகக் கண்டு எழுதிய நகரின் வருணனைகள் நகரை நம் கண்முன் உயிரோவியமாக இயங்க வைக்கின்றன. நகருக்கு நடுநாயகமாக அரண்மனையடுத்து எதிரெதிராக நான்கு கடைவீதிகள் சென்றன. அவற்றில் ஒவ்வொரு பொருளுக்குரிய வாணிகக் களங்களும் ஒவ்வொரு வரிசையாக அணியணியாக இணைந்திருந்தன. மணிவீதியெங்கும் மணிவாணிகர் முத்துக்களையும் மாணிக்கங்களையும், மரகதங் களையும், வைரங்களையும், பவளங்களையும், கோமேதகங்களையும் குவியல் குவியலாகக் குவித்து வைத்து விலை கூறினர். தெருக்கள் யாவும் கல்பாவி அழுத்தம் செய்யப்பட்டு அரண்மனை முற்றங்கள் போலக் காட்சியளித்தன. அவற்றின் இரு மருங்கிலும் தெண்ணீரோடைகள் சலசலத்தவண்ணம் இயங்கின.

சமகால அறிஞர் எழுதியவற்றுட் பெரும்பாலானவற்றின் வாய்மையை நகரின் இன்றைய பாழடைந்த பரப்பே மெய்ப்பிக்க வல்லதாகின்றது. தென்னகங் காணவரும் அகல் உலகக் கலையார்வலர் எவரும் வாழ்நகர்களின் கலைக்காட்சிகளிடையே இந்தப் பாழ்நகரின் காட்சியையும் காணாதமைவதில்லை. நகரின் பாழ்நிலையிலும் கலை மாளா வாழ்நிலையே எய்தியுள்ளது.

பேரரசு காலத் தென்னகத்தின் செல்வ வளம்

விசய நகர காலத்துக்கு முன்னும், விசய நகர காலத்திலும், விசய நகர வாழ்வு கழித்து இரண்டு நூற்றாண்டுகள் வரையிலும் கூடத் தென்னகம் உலகின் செல்வக் களஞ்சியமாகவும், கருவூலமாகவும் விளங்கியிருந்தது. இதனை ஐயத்துக்கிடமின்றிக் காட்டும் செய்திகள் பல உள்ளன.

விசய நகர பேரரசு நிறுவப்பட்டதற்கு ஒரு சில ஆண்டுகட்கு முன் தில்லியில் ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக் காபூர் இராமேசுரம் வரை சென்று பல கோயில்களின் செல்வங்களைக் கொள்ளை கொண்டு மீண்டான். அவற்றில்