வெற்றித் திருநகர்
29
பீடுநடை போடும் உரத்தையும் அது தென்னகத்துக்குப் பரிசாக வழங்கிற்று.
தனி மனிதன் வாழ்வில் புயலார்ந்த உணர்ச்சிகளைக் குடும்பப் பண்பு காதல் மணமென்னும் தென்றற் பண்பாக்கித் தெண்ணிய வொளிவீசக் காண்கிறோம். திருமணம் அவ்வாழ்வின் மைய நிகழ்ச்சி அதற்காகவே தனி மனிதன் வாழ்கிறான் என்று கூறுதல் தவறாகாது. ஆனால் அவன் வாழ்வின் மைய மட்டுமன்று, அவன் பிறப்பும் ஒரு திருமண வாழ்விலிருந்து தான் எழுகிறது அதுவே அவனை ஈன்றெடுத்தவரின் திருமண வாழ்வு. அவன் வாழ்வு சென்றொடுங்குவதும் திருமண வாழ்விலேயே - இம்முறை அது அவன் ஈன்றெடுத்த மதலையர் திருமண வாழ்வாகின்றது. இங்ஙனம் மணவாழ்விலிருந்து மணவாழ்வு நோக்கி, இடையே ஒரு மணவாழ்வினூடாகவே செல்லும் இத்தனி மனித வாழ்வின் இயல்பினை நாம் பேரரசவரலாற்றிலும் காண்கிறோம். கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீசியடித்த ஒரு சூறாவளியை அது தன் அமைதிப் பண்பால் தென்றலாக்கி அதில் பிறந்து வளங்கொழித்தது. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த மற்றொரு சூறாவளியில் அது மறைவுற்றது. ஆனால் அச்சூறாவளிகளிடையே தன் மரபுக்கொழுந்துகளைத் தென்றற் பண்பு மரபுகளாகப் படைத்து விட்ட பின்னரே அது மறைந்தது.
ரு
இவ்விரண்டு சூறாவளிகளுக்குமிடையே 1565-இல் பேரரச வாழ்வின் மையக் கூறாக, புகழுச்சியின் மகுடமாக மற்றொரு புயல் எழுந்தது.பேரரசு தன் வெற்றிகளிடையே கண்ட ஒரு மாபெருந் தோல்வி அது - பேரரசின் பெருமையில் பெரும்பகுதி அதில் வடிவுற்றது. ஆயினும் உலகின் எந்தப் பேரரசின் எந்த வெற்றியும் காணாத புகழை அது கண்டது. தோல்விக்குக் காரணமான பேரரசின் வழுக்களைத் தேடிக் காண்டல் அரிதன்று -வரலாற்றா சிரியர்கள் பொதுவாக அதில் குறை வைக்கவில்லை. ஆனால் அம் மாபெருந்தோல்வியே பேரரச வாழ்வின் தேசீயச் சிறப்பையும் தனிப்பெரு வீறமைதியையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவ தாயுள்ளது.
பிறப்புக் காலப் புயலும் மறைவுக்காலப் புயலும் தென்னகத்தின் அகப்புயல்கள் அல்ல. தென்னகத்துக்கு