வெற்றித் திருநகர்
59
நயத்தையும் நாம் வித்தியாரணியரிடம் காண்கிறோம். வடதிசை சூறையாட்சிக்கெதிராக அவர் மக்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் சமயங்களுக்கும் பாதுகாப்பு வலுத்தேடினாரேயன்றி,
இஸ்லாத்தையோ இஸ்லாமிய ஆட்சியையோகூட எதிர்க்க நாடவில்லை. இஸ்லாம் சமயத்தவருடன் மற்றச் சமயங்களைச் சார்ந்தவர்களும் போட்டி பூசல்களுக்கோ, அரசியல் தலையீடு, அரசியல் அட்டூழியங்களுக்கோ ஆளாகாமல், தத்தம் போக்கில் தங்கு தடையற்ற வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பையே அவர் நாடினார். தற்காலப் பாணியில் கூறுவதானால், அவர் நாடி நிறைவேற்றிய சமய சமுதாய அரசியலமைப்பே உலகின் முதல் முதல் சமய சமரசக் கூட்டமைப்பு என்று கூறலாம்.
இத்தகைய அமைப்புக்கு ஒரு பேரரசு உதவும் என்று அவர் கருதினாலும், இதை நிலையானதாக்க அவர் போர்களை வழி முறைகளாக நம்பி எதிர் பார்த்திருக்கவில்லை. போர்கள் உதவும் என்று கருதவுமில்லை. மக்களியக்கத்தையே இவ்வகையில் அவர் நம்பியிருந்தார். மக்களியக்கத்துக்கான திட்டமிட்டு அதன் மூலமே தேசீய வலுவை வளர்க்க அவர் எண்ணினார்.தென்னகத்தின் மக்கள் சமுதாயத்தைச் சிறப்பாகவும், தென்னகத்தை அடுத்த அண்டை யயல் நிலச்சமுதாயத்தைப் பொதுவாகவும் இயற்கையே அமைத்த கோட்டையோ என்னும்படி அவ்வளவு உறுதி வாய்ந்ததாக ஆக்கியவர் இயற்கையின் திருமகனாராகிய இப்பெரியாரே! பின்னாட்களிலும் நம் நாட்களிலும் நம் இச்சமுதாயத்தின் பண்புகளை, குறைகளைக் கூட அகற்றவோ, சீர்திருத்தவோ முயன்ற, முயன்று வரும் எல்லாத் தலைவர்களும், அறிஞர்களும், இயக்கங்களும் பாறையில் மோதும் அலைகளாக நொறுங்குவதன் காரணம் இதுவே. தேசீயத் திட்டமாக ஒரு பேரரசின் துணையுடன் அப்பேரறிஞர் அமைத்த அமைப்பை அதுபோல ஒரு தேசீய அரசின் துணைகொண்ட தேசீயப் பேரறிஞரே மாற்றியமைக்க முடியும் என்று கூறலாம்.
வித்தியாரணியர் அமைப்பாண்மைத் திறம்
வித்தியாரணியர் வகுத்தமைத்த தேசீய அமைப்பில் அவர் அமைப்பாண்மைத் திறம், அவர் பண்பிணக்க நய ஆற்றல் ஆகியவற்றின் சுவடுகளை இன்றளவும் காணலாம். மக்கட் சமயங்கள், அறிவுத்துறைக் கோட்பாடுகள், புரோகித மரபு ஆகிய