பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 81

வேதகால இசை (கி.மு. 1000), ஆதி கிரேக்க இசை (கி.மு.8ஆம் நூற்றாண்டு), சீனஇசை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இக்காலத் தமிழ்க் கவிதையும் (கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல்) ஆதி கிரேக்க காலக்கவிதையுடனும் (pastoral odes) சீனக்கவிதை மரபுடனும் தொடர்புடையன. தமிழர் இத்திணையில் வளர்ந்த கற்பு மரபு (பெண் ஆட்சி மரபு) கூட கிரேக்க உரோம சீன எல்லைவரை ஒளிபரப்பியிருந்தன என்று கூற இடமுண்டு. சீனப்பேரரசர் பேணிய கற்புச் சின்னமான பெரு வளைவுகள் (arches) இதற்குச் சான்றுகள் ஆகும். கிரேக்கர் அறியாத தாய்மைச் சிறப்பினை உரோமர் உணர்ந்து மதித்திருந்தனர் என்பதும் இம் மரபின் தடம் ஆகும்.

முல்லை மரபில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுபாடுகள் பலவற்றுக்கு வழிவகுத்த பெருந்திருப்பமாவது, குறிஞ்சி மரபு அல்லது கோமரபுக் காலத்துக்குரிய பெண் இறைமை, பெண் ஆட்சி, பெண்வழி மரபு, பெண்வழிச் செல்வ உரிமை ஆகியவை படிப்படியாக ஆணுக்கும் உரிமைப்பட்டு, பின் ஆண் வழிக்கு மாற்றப்பட்டு வந்ததே ஆகும். (குறிஞ்சி முல்லை நிலைகளுக்குரிய இத் தடங்களைக் கேரளத்தில் செறிவாக, தமிழகத்திலும் இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் பசிபிக்மாகடல் தீவப்பரப்பிலும் பிற தென்னுலகப்பகுதிகளிலும் அப்பாலும் பரவலாகக் காணலாம்). பெண்ணுடன் ஆண் வாழ்விலும் ஆட்சியிலும் சரிசம பங்கு கொள்ளும் இக் கற்புநிலை நாகரிகத்தளத்திலேயே பெண்பாலார் அக (வீட்டு) ஆட்சிக்கும் ஆண்பாலார் புற (நாட்டு, உலக) ஆட்சிக்கும் சிறப்புரிமை உடையவர் ஆயினர். முல்லைத் திணைக்குரிய தெய்வமாகிய கண்ணனின் காதல் துணைவியான நப்பின்னைப் பிராட்டியே (மராத்தி குசராத்தி நாட்டு ராதா கிருட்டின வழிபாட்டு மரபுக்குரிய ராதையே) கண்ணகிக்கு முன்னோடியான கற்புத் தெய்வமாகக் கருதப்பட்டாள். (பிற்கால இந்து சமய மரபு ராதையைக் காமக் கிழத்தியாக்கி இழிவு படுத்தியுள்ளது.)

ஆட்சிப் பண்பு மரபின் இப் புரட்சியே சமய, சமுதாய வாழ்வு களிலும் பண்பாடுகளிலும் மொழி மரபுகளிலும் பெருந் திருப்பங்களை உண்டு பண்ணிற்று. தொல் பழங்காலத்தில் அன்னை (கன்னித்தாய்) வழிபாட்டு மரபு அன்னையின் மகன்