பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 93

உயிராறுகளில் நீர்வளம் வற்றிய பின்னும் அடிநில ஊற்றின் வளம் சுரத்தல் போல, குடியரசுகளின் புறவீழ்ச்சிக்குப் பின்னும் கொங்கு மக்களின் உள்ளத்தின் உள்ளார்ந்த இயலுணர்வான குடியரசுப் பண்பு மேல்நிலைத் தனியாட்சிகளைத் தம் வயப்படுத்திக்கொண்டு அம்மேல் நிலையாட்சிகளின்

நிழலிலேயே புதுமுறைத் தனிமலர்ச்சிகள் கண்டுள்ளது. அதன் மூலம் அது மக்கள் தனி வாழ்வுரிமை, கூட்டு வாழ்வுரிமை, தன் முடிபுரிமை ஆகியவற்றைச் சமுதாயத் தன்னாட்சிக்குரிய புதிய கட்டுக்கோப்புகளாக மாற்றியமைத்துக் கொண்டது. இது மட்டுமன்று, சாதி மரபு உருவில் நின்றே அது புறமண்டலச் சாதி மரபுகளைப் போலத் தனித்து நின்று விடாமல், தம்மைச் சூழ ஒத்திசைவுப் பண்பு பரப்பி, நாடு மாநாடு பெருநாடு, குடியரசுக் குழு, உலகம் ஆகிய விரிவுகள் நோக்கிய குடிவிரிவு நாட்டு விரிவு ஆகிய மலர்ச்சிகளைப் பேணி முன்னேறிவரத் தலைப்பட் டுள்ளது.

கொங்கு நாட்டு வேளிரிடையே தலை சிறந்தவனென்று கூறத்தக்கவன், தகடூர் வேளாகிய அதியமான் ஆவன். அவன் மரபினர், சங்க காலத்துடன் முற்றிலும் தனி ஆட்சி இழந்து விடாமல், கங்கர் பாண்டியர் சோழர் காலங் கடந்தும் அவ்வக்கால மேலாட்சி நிலைகளுக்கு உட்பட்டுத் தம் தனியாட்சி மரபு நீட்டித்திருந்தனர். இதைவிடக் குறிப்பிடத்தக்க தனி முறையில் தற்காலக் கொங்கு நாடும் அது கடந்து பண்டை வடகொங்குப் பகுதியும் பரவியாண்ட கட்டியர் என்ற வேள் மரபினர் கங்கர், பாண்டியர்-சோழர் காலம் மட்டுமன்றி, விசயநகர மரபின் ஆட்சிக்காலம் (கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டு) கடந்தும் தம் தனியாட்சி மரபு காத்து வந்தனர். அத்துடன்மை யாமல், இன்றுவரை கூட அம் மரபினர், தம் அரசியல் ஆட்சிமரபு இழந்தும் தம் சமுதாய ஆட்சிமரபும் சமுதாயக் கட்டமைப்பும் இழவாமல், கட்டி முதலியார் என்ற பெயரில், தனிச் சாதிமரபுக் குழுவினராகவே இயங்கிவருகின்றனர். (கொங்கு மரபின் உரம்பாய்ந்த குடியரசுப் பண்புக்கு இதுவும் ஒரு சான்று ஆகும்).

இந்தியாவிலும், சிறப்பாகத் தமிழகத்திலும், கொங்குத் தமிழகத்திலும் சாதிக்கட்டு மரபுக்கும், ஊராண்மை நாட்டாண்மை மரபுகளுக்கும் பண்டை வேளிரின் குடியரசு மரபுகளுக்கும்