பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 137

ஒத்திசைவாற்றலின் திறத்தால் அது நாளடைவில் அவர்களையும் தம் வயமாக மாற்றியமைத்து விட வல்லதாகியுள்ளது. இது வியப்புக்குரியதன்று. ஏனெனில், கொங்குப் பண்பு என்பது நாடு கடந்து, மொழி கடந்து, கால இடச் சூழல் கடந்து பரவ வல்ல தமிழர் இறைப் பண்பு, வள்ளுவப் பண்பு ஆகும் உலக முழுவதற்கும் மனித இன நாகரிக முழுவதற்கும் உரிய பழமை நல, பயின்று வளர்ந்த பண்பு நலத்தின் மரபுத் திறம் அதுவே!

சங்க காலத்திலிருந்தே, முடியரசின் முதலாவது இரண்டாவது ஊழிகளுக்கு முன்னிருந்தே, கொங்கு நாட்டு ஆட்சி முடியரசரால் முடியரசின் நேரடியாட்சியாக நடத்தப் பெறவில்லை. அது, வேள்குடி மரபில் வந்த தலைவர் மூலமான குடிமரபாட்சியாகவே இருந்து வந்தது. வேள் புலக் குடியரசர் ஆட்சிக் காலத்தில் கூட இதே நிலை இருந்திருக்க வேண்டும் என்னல் தகும். அவர்கள் ஆட்சி, இயல்பான மக்கள் வாழ்க்கை நலம், குடி சமுதாய நலம் ஆகியவற்றிலிருந்து மலர்ந்து, ஆண் பெண்பாலர் உள்ளடங்கலாக இயல்பான மக்கள் தலைமை மூலமே, மக்கள் மனமறிந்த மரபு நெறிகள் மூலமே நடைபெற்றது என்பது காண்டற்குரியது. ஏனெனில், அவர்களின் ஆட்சி மரபை வேளாளர்-வேட்டுவர் ஆட்சி மரபுகளாகப் பிரித்தாள முற்பட்ட வேற்றரசரும் சரி, மற்ற நாட்டரசரும் சரி-இரு சாராருக்கும் ஒரே பட்டமாகக் கொங்கர், குடவர் அல்லது கவுண்டர் அல்லது கௌடர், காமிண்டர் என்ற காவலுரிமை, ஆட்சியுரிமை விருதுகளே வழங்கினர்.

'கொங்கர்' என்ற இவ் விருதுப் பட்டம் காட்டும் உயரிய குடியாட்சிப் பண்பு அதாவது உயர்வார்ந்த தேசியப் பண்பின் திறம் நினைக்க நினைக்க இனிப்பூட்டுவதாகும் இவ்வினிப்பு, அதன் சொல்லும் பொருளும் கடந்த நாகரிக உலகின் ஒப்புயர்வற்ற பண்பினிப்பேயாகும். ஏனெனில், உண்மையான குடியரசுப் பண்பு வாய்ந்த ஒரு நாட்டில் அதன் பதவிகளி லெல்லாம் மிக உயரிய பதவி அந்நாட்டின் குடிமகன் (இக்காலத் தமிழ்ப் பொருளான அம்பட்டனன்று; பண்டைப் பொருளான குடியுரிமையாளன், Citizen and Voter of a self-governing democracy) என்ற பதவியேயாகும். குடியரசு நாட்டின் குடியாட்சி மரபில், எல்லாப் பதவிகளையும் வழங்கும் பெரும் பதவி அதுவே!