பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 155

அல்லது அதனை இழந்துவிட்ட வேளாண் மரபினர் சிலர் பலர் கூடத் திருமண வினையின்போது தம்மைக் கங்கை கோத்திரத்தார் என்றே கூறிக் கொள்கின்றனர். மேலே விளக்கியுள்ளபடி, இங்கே கங்கை என்பது காவிரியைத்தான் சுட்டுகிறது என்று கொள்வதே பொருந்தும் (முதனிலை மரபாக வேளாண் மலர்ச்சி வடபாற் கங்கைக் கரைவரை என்றுமே எட்டியதில்லை). தமிழ் மரபிலேயே சோழநாடு காவிரியுடன் தொடர்புடையது மட்டுமன்று, சிறப்புப்படக் காவிரிநாடு என்றே அழைக்கப் பெறுவது ஆகும். எனவே மேலீடாகப் பார்த்தால், இவ்வகையில் நாம் கொங்கு வேளாளரின் ஆர்வ முடிவை ஏற்று, வேளாளர் இனத்தின் மூலத்தாயகம் சோழ நாடே என்று முடிவு செய்ய இடமுண்டு (சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழி வகுத்த மைய நாடு சோணாடே என்பதும் இம் முடிவுக்கு வலிமை சேர்க்கத் தக்கதேயாகும்). ஆனால் வேளாள் இனத்த வரின் மரபுரைகள் இந்த ஆர்வமுடிவுடன் முரணுகின்றன.

வேளாளப் பேரினத்தவருள் கார்காத்தார் பெயருடனேயே, கார் மண்டலம் (கங்கவாடி அல்லது இன்றைய வடகொங்கு, பண்டை வடகொங்கு அளாவிய பகுதி), தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் பெயருடனேயே துளுநாடு (குடகு நாடு உள்ளிட்ட பண்டை மேல் கொங்கு நாடு) ஆகியவை தொடர்புடையவை. இம் மரபினரும் தொண்டை மண்டல (கொண்டல் கட்டி) வேளாளரும் (நாட்டுக்கோட்டை வணிகரும் பிறரும் கூட) தம் மரபு வரலாறுகளில் தாம் நாக நாடு அல்லது கங்க நாட்டிலிருந்தே சங்க காலத்தை ஒட்டிய ஒரு தொண்டை மானால் குடியேற்றப்பட்டவராக அல்லது பிறிது காரணங் களால் குடியேறியவ ராகக் கூறுகின்றனர். வேளாளரினத்தின் மூல மலர்ச்சித் தாய் மரபாகக் கருதப்பட்டு வந்துள்ள கங்கை மரபு அல்லது காவிரி மரபு சோழ நாட்டைக் குறிக்கவில்லை, அந்த ஆற்றுடன் தொடர்புடைய பண்டைக் கொங்கு நாட்டை, சிறப்பாகக் குடகு நாடும் மேல் கடற்கரையும் காவிரியும் அளாவிய மைய வேளாள நாட்டையே குறிக்கின்றது என்பது இதனால் பெறப்படுகின்றது. (நாக நாடு என்பதுகூட நாயர், நாய்கர், நாயுடு போன்ற தமிழகத்துக்கு அப்பாற்பட்ட தமிழின நாட்டு மரபுகளுடனே மிகு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. அதுவும் குடகு நாடாகவே இருத்தல் கூடும்)