பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
166 ||

அப்பாத்துரையம் - 14



வேளாளர் உட்பட்ட கொங்கு மக்கள் வாழ்வும் ஒரு விலை மதிப்பிட வொண்ணாத கருவூலம் ஆகும்.

கொங்கு வேளாளர் மரபு சாதி மரபுகளிடையே ஒரு சாதி மரபாக, பல வேளாளர் மரபுகளிடையே ஒரு வேளாளர் மரபாக மட்டுமே பலருக்கும் மேலீடாகத் தோற்றமளிக்கக்கூடும். ஆனால், அது வேளாளர் இனத்தின் வரலாற்றையே தன் வரலாறாகத் தன்னகங் கொண்டு வேளாளர் இனத்தின் மணிப் பதிப்பு, நிறைமணிப் பதிப்பாக இயல்வது ஆகும். அத்துடன் அது தற்கால வேளாளர் இனத்துக்கு மட்டுமன்றி, பிராமண இனத்துக்கும், மற்ற எல்லா இந்திய மரபினருக்கும் உரிய பொது மூல மரபாகிய வேள் மரபு அல்லது குடியரசு மரபின் நேர் மரபுக் கொழுந்தாய் இன்றும் அதன் பெயரும் பண்பும் மரபும் மீட்டும் உயிர்ப்பித்துப் புதிய தேசிய, புதிய நாகரிக வாழ்வுக்கும் உலகுக்கும் வழிகாட்ட வல்ல மரபொளி யாய் இயல்கின்றது.

சாதிவருண உயர்வுதாழ்வு பேணிவரும் ஏடாகூடமான மரச் சட்டத்தினுள்ளும், வகுப்பு, நாடு, மொழி இன வேறுபாடு, நிற வேறுபாடு பேணும் சூழல்களினுள்ளும், குடும்ப சமுதாய வாழ்வு கெட்டழியும் தற்கால மேலையுலக வாழ்வுகளிலும், குறிக்கோளும் திட்டமுமின்றி அல்லாடும் தற்கால உலகுக்குத் தமிழ் மொழியும், தமிழர் திருக்குறளும் போலப் பழைய சமதரும அடித்தளத்தில் நின்றெழும் ஒரு புதிய சமதரும ஒளிக்கம்பமாக, கொங்கு நாடும் கொங்கு வேளாண்மை மரபும் பொங்கொளி வீசுகின்றன.