பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 167

3. சங்கம் கண்ட கொங்கு வாழ்வு

1) வேள் புலக் குடியரசுக் கோட்டங்கள்

சங்க காலப் பெருங் கொங்குத் தமிழகம் சேர சோழ பாண்டிய தொண்டை மண்டலங்கள் புடைசூழத் தமிழகத்தின் நடுமையமாகவும் அதன் முனைப்பான மரபிளங் கொழுந்தாகவும் விளங்கிற்று. தமிழக வரலாற்றின் வான விளிம்பாகிய தொல் பழங்காலத்திலிருந்தே சங்ககால இறுதிக் காலமாகக் குறிக்கப் படும் கி.பி.250 (கி.பி.3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) வரையுள்ள இப்பேரூழியின் முற்பகுதியில் (கி.பி. 1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதிவரை) இப்பரப்பு முழுவதும் வேள் புலக் குடியரசுகளின் ஆட்சிக் கோட்டங் களாகவே திகழ்ந்தது. அப்பேரூழியின் பிற்பகுதியில், அவை ஒவ்வொன்றாகக் கொங்குப் பேரரசர் கட் டியெழுப்பிய கொங்குப் பேரரசினால் தனித்தனிக் குடியரசு நாடுகள் என்ற முறையில் விழுங்கப்பட்டுவிட்டன.

ன்

சங்ககால வேளரசுகள் எண்ணிக்கையில் மிகமிகப் பலவாகவே இருந்திருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில், அவற்றைப்பற்றி நமக்குத் தெரிவிக்கும் சங்க இலக்கியங்களும் சங்க கால முத்தமிழ் இலக்கிய இலக்கணப் பரப்புகளும் எல்லாமே நிறைவாக நமக்கு வந்து எட்டவில்லை. இறந்தவையும் மறைந்தவையும் போக, எஞ்சியவைகளும் பெரிதும் சிறிதும் சிதைந்த வடிவிலேயே வந்து கிட்டியுள்ளன. அவற்றால் கூட நாம் பண்ணன், ஏற்றை, வெளியன், அத்தி, முன்றுறை போன்ற பல வேளிர்கள் வகையில் அவர்களின் பெயர் மட்டுமே அறிகிறோம்; பெயர் அறியப்படாத வேள் புலங்களும் இருத்தல் கூடியதே.

இந் நிலையிலும் நாம் சங்கப் பலகணிகள் மூலம் பண்டை மேல் கொங்கு நாட்டில் கோசர், கடம்பர் ஆகியவர்கள் பற்றியும்; பண்டை வடகொங்கு நாட்டில் குதிரைமலை, துவரைநாடு, புன்னாடு, எருமையூர், கங்கநாடு, கட்டிநாடு ஆகியவை பற்றியும்;