பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
178 ||

அப்பாத்துரையம் - 14



அசோகன் காலத்திய நிகழ்ச்சிகளுக்குப் பின், இரண்டு மூன்று நூற்றாண்டுக் கால அளவும் நாம் பெருங்கொங்கு, மேல் கொங்கு நாடுகள் பற்றிக் குறிப்பிடத்தக்க எதுவும் அறிய முடியவில்லை. ஆயினும், கோசர் தொடர்ந்து வல்லரசாகவே நீடித்து வளம் பெற்றுவந்தனர் என்பதைக் காண்கிறோம். பொதுவாகத் தமிழக அரசுகளுடனும் சிறப்பாகச் சேர அரசுடனும் தொடர்ந்து அவர்கள் நட்பு மேன்மேலும் பெருகிக் கொண்டே தான் இருந்தது. மேலே சுட்டியபடி கொங்கு நாடு உட்படத் தமிழக முழுவதும் அவர்கள் பரவி, அரசரிடமும் செல்வரிடமும் படை வீரர், ஆட்சிப் பொறுப்பாளர், பணியாளர்களாக விளங்கிய காலம் இதுவே யாகலாம். அதே சமயம் கோசரால் அசோகன் காலத்தில் முறியடிக்கப்பட்ட கடம்பர் விரைவில் மீட்சி பெற்றுப் பின் வந்த நூற்றாண்டுக்குள் முதலாம் நன்னன் காலத்திலிருந்ததை விடக் கடலாட்சியிலும் பொன் வளத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு வளமுடன் வளர்ச்சி பெற்றிருந்தனர். சேரருடன் அவர்கள் ஓயாது பகைமை கொண்டு போராடினர். இப் போர்களில் கோசர் தொடர்ந்து சேரருக்கு ஆதரவாகவே செயற்பட்டிருந்தனர் என்று கருதலாம்.

பெருஞ்சேரர் காலத்து (கி.பி.1,2ஆம் நூற்றாண்டு) நன்னன் புலவர்களால் பெரும் பெயர் நன்னன், 'பொன்னங் கண்ணி பொலந்தார் நன்னன்' என்று சிறப்பிக்கப்படுகிறான். அவன் நாட்டுப் பொன் வளச்சிறப்பையும் 'கடம்பின் வாயில்' என்ற பெயருடைய அவன் தலைநகரச் சிறப்பையும் அவர்கள் பலபடப் பாராட்டியுள்ளனர். கந்தபுராணத்தின் சூரபத்மனை நினை வூட்டும் முறையில் அவன் காவல் மரம் அமைந்த மூலதளம் கடலகத்துள்ள ஒரு தீவில் இருந்தது. சேரரின் தொல்பழங்காலத் தலைநகரான நறாவையும் (பதிற்றுப்பத்தும் கிரேக்கர் குறிப்புகளும் சுட்டுவது) பூழி நாட்டையும் அவன் கைக்கொண்ட தனாலேயே, குடக்கோ நெடுஞ்சேரலாதன் காலத்திலிருந்து சேரர்கள் வஞ்சி அல்லது மேல் கடற்கரைக் கருவூரைத் தம் தலைநகராக்கிக் கொண்டனர் என்று அறிகிறோம்.

குடக்கோ நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல் யானைச் செல் கெழுகுட்டுவன் பூழி நாட்டையும் பண்டை வட கொங்கு நாட்டையும் வென்று நன்னனையும் கீழடக்கினான். இவற்றின்