பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 193

வளத்துக்கும் அவை பேர் போனவை என்றும் அறிகிறோம். ஆயர்கள் இக்காடுகளில் பசுவளம் பெருக்கி நெய்வளம் கண்டனர் (பால்வளப் பொருள்களில் வெண்ணெயையும் பாலேட்டையுமே மேலையுலக மொழிகள் அறியும்: நெய் என்ற பொருளும் சொல்லும் தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் மட்டுமே உரியன. பண்டைக்கொங்கு நாட்டிலும் தமிழக நெய் என்ற இப்பால்வளப் பொருள் உலக வாணிகச் சரக்காக உருவாக்கப்பட்டது என்பதனை இம்மொழி மரபு சுட்டிக் காட்டுகிறது. முதல் முதல் பசுவைப் படைத்தளித்த நாடும் கொங்குத் தமிழகமே என்பது மேலே சுட்டப்பட்டுள்ளது. (தமிழில் மட்டுமே மரபியல் நெய்க்கு முற்பட்ட பழமை நெய்க்கு உரியது).

கண்டிர நாட்டு வேளிர் 'கண்டிரக்கோ' எனப்பட்டனர். சங்க காலப் புகழ்பெற்ற வேளான கண்டிரக்கோப்பெருநள்ளி என்பவன், வள்ளல்கள் எழுவரில் ஒருவன். இவ் வேள்புலப் பகுதிக்குரிய புகழியூர் மலையின் கல்லெழுத்துக்கள் மூலம் இவன் பெயராலேயே நள்ளியூர் என ஓர் ஊர் இருந்ததாக அறிகிறோம். இதுவே அவன் தலைநகராக இருந்திருத்தல் கூடும்.

புலவர்களுக்குக் கண்டிரக்கோப் பெருநள்ளி, தேர்களையும் யானைகளையும் பரிசில்களாக வாரி வாரி வழங்கினான் என்று அறிகிறோம். ஆனால், அவன் குருதி மரபின் வண்மை, அவன் வண்மை யுடனேயே போட்டியிட்டது. அவன் இல்லாதபோது அவனை நாடி வந்த புலவர்களுக்கு அவன் வேள்மனைப் பெண்டிரும் பிள்ளைகளும் பிடி யானைகளையும் (பெண் யானைகளையும்) குட்டியானை (போதகங்) களையுமே பரிசாகக் கொடுத்தனர் என்ற இனிய செய்தியைப் புலவர் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ஒரு சமயம், வன்பரணர் என்னும் புலவர் பெருமான் அவனை நாடிக் காட்டுகளில் நடந்து, ஒரு மரத்தடியில் பசிவிடாயாலும் களைப்பாலும் சோர்ந்து கிடந்தார். அச் சமயம் பெருவேள் நள்ளி யாரோ ஒரு வேடன் போல வந்து, ஒரு மானைத் தானே வேட்டையாடி அதன் இறைச்சியைச் சமைத்து, அப் புலவரை உண்பித்தான். அவனே நள்ளி என்று பிற்பட்டே அறிந்த புலவர்பெருமான், அவனை உளமாரப் பாடிப் புகழ்ந்தார் (புறம் 150).