பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
208 ||

அப்பாத்துரையம் - 14



மூன்றாம் பத்தில், பல்யானைக்குட்டுவனின் இருகடல் விழா அரும்புகழ் விழாச் செயலாக விரித்துரைக்கப்படுகிறது. பின்னாட்களில் சோழப் பேரரசரும் விசயநகரப் பேரரசரும் தொடர்ந்து கொண்டாடிய இத்தேசிய விழா மரபின் மூலத்தையும் அது கொண்டாடப்பெற்ற முறையையும் நாம் இங்கேதான் காணமுடிகிறது. சேரரின் அயிரைமலைத் தெய்வத்தின் முன் வீற்றிருந்த குட்டுவன் அங்கிருந்து இரு கடல் வரையிலும் இரண்டிரண்டு வரிசைகளாகப் பத்தடிக்கு ஒரு யானையை நிறுத்தி, இரு கடல் நீரையும் ஒரே சமயத்தில் அஞ்சல் செய்வித்துத் தன்னை நீராட்டிக் கொண்டான் என்று பதிற்றுப்பத்து விரித்துரைக்கிறது. பூழி நாட்டு வெற்றியை அடுத்து வடகொங்குப் பரப்பு, வட தொண்டைப் பரப்பு முழுவதிலும் குட்டுவன் வெற்றி மூலம் நாட்டிய மேலாட்சி விரிவையே இவ்விழா எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு குட்டுவன் இவ் வெற்றி விழாவைத் தனதாகக் கொண்டாடினாலும், இதில் தனக்குதவிய கொங்குச் சேரனிடமே அம் மேலாட்சி முழுவதையும் ஒப்படைத்தான் என்று அறிகிறோம்.

வ்

வீரத்துடன் வள்ளன்மையும், இரண்டினுடன் சமயப் பற்றார்வமும் இப் பேரரசன் வாழ்வில் சரிசமப் பங்கே கொண்டன.

இக் கொங்குப் பேரரசனிடம் பரிசில் நாடி வந்த புலவர் குண்டுகட் பாழி ஆதனாருக்கு அவன், பெருஞ் செல்வமும் யானை, குதிரை, ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளும், வயலும் மனையும், வயலில் உழைப்பதற்கான களமரும் (உழவரும்) வாரி வழங்கினான். இவற்றைப் பெற்ற புலவர் தாம் காண்பது கனவா அல்லது நனவுதானா என மயங்குவதாக (புறம் 387) நயம்படப் பாடுகிறார்.

தான் இல்லாதபோதும், தன்னை எதிர்பாராமலே புலவர்களுக்குத் தன்னிடமுள்ள செல்வக்குவையையும் தேர்களையும், குதிரைகளையும், முட்டின்றி வாரி வழங்கும்படி அவன் தன் பணியாளர்களுக்கு நிலைக் கட்டளையிட்டிருந்த தாகக் கபிலர் (7ஆம் பத்தில்) பாடுகிறார். இது மேலே கூறப்பட்ட கண்டிரக்கோப் பெருநள்ளியின் வேள்குடி வண்மையையே நினைவூட்டுவதாயுள்ளது.