பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கொங்குத் தமிழக வரலாறு

|| 69

ஆயிர இதழ்த்தாமரை வடிவிலே அமைந்துள்ள தமிழக மதுரை மாநகரைப் போலவே கிரேக்கரிடையிலும் பிற நாகரிக உலக மக்களிடையிலும் இந்த நகர்-நாடு அரசும் அதன் மையப்பேரூர் அல்லது கோநகரமும் குலமுதல்வன் அல்லது குலமுதல்வியாகிய இந்தக் கோவின் மனையை (கோயில், கோவில்-அரண்மனை அல்லது வழிபாட்டிடம்) அல்லது இந்தக் கோவின் சின்னமாகிய நடுகல் (இலிங்கம்) அல்லது கோமரம் (தற்காலத் திருத்தலத் திருமரம், கொடிமரம்) நிறுவப் பெற்ற ஊர் வெளியை (பொது, பொதியில், பொதியம், பொதியை அல்லது பொதிகை) நடுவாகக் கொண்டே அமையப் பெற்றிருந்தன. நாளடைவில் குல முன்னோனாகிய ஆதிகோவே தெய்வமாய் (குலதெய்வ மரபாய்), அத்தெய்வ மரபில் வந்த கோக்களே (கோ-தெய்வம், அரசன்) அத்தெய்வ வழிபாட்டுக்குரிய பூசனைக் குருமாராகவும் அத்தெய்வ மரபில் மலர்வுற்ற நாட்டுமக்களின் அரசராகவும், சமுதாயத் தலைவராகவும் போர்க்காலப் படைத்தலைவராகவும் செயலாற்றினர்.

பண்டைத் தமிழர், பண்டை நாகரிக உலகமக்கள் ஆகியோரின் இனமலர்ச்சியிடையே இனத்தின் அல்லது நாட்டின் மூலமுதல்வி அல்லது மூலமுதல்வனான கோவே இறைவி அல்லது இறைவன் அல்லது அம்மையப்பனாகிய சிவபிரான் (குறிஞ்சி நிலத்து வள்ளி-முருகன், முல்லை நிலத்து நப்பின்னை-கண்ணன்) ஆயினர். ஊர் மையப் பொது வெளியாகிய அம்பலமே வழிபாட்டிடமாகிய கோயிலாகவும், மக்கள் கூடுமிடமான ஆட்சி மன்றம் அல்லது அம்பலமாகவும் வளர்ச்சிபெற்றது.

போர்க்காலக் கோட்டையாகவும், அமைதி காலப்பள்ளி கல்லூரி பல்கலைக் கழகங்களாகவும், ஆட்சி மன்றம், நீதிமன்றம், திருமண அரங்கங்களாகவும், கலைக் கூடங்கள், சொற் கூடங்கள், ஆய்வாராய்வுக் கூடங்களாகவும் களஞ்சியங்களாகவும், விழா வழிபாட்டுக் களங்களாகவும் அயலாட்சிக் காலம் வரை நிலவிவந்துள்ள காஞ்சிமாநகரக் கோயில்கள் இந்த இனமலர்ச்சி வளர்ச்சிகளின் சின்னங்கள் ஆகும்.

மேற்காட்டப்பட்ட ஒளவைப் பிராட்டியார் பாடலும், அவ்வடிவில் கிரேக்க வரலாற்றாய்வாளர் எடுத்துக்காட்டிய-