பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கொங்குத் தமிழக வரலாறு

|| 71

இருதிறப் பொருள்களும் இணைவது காணலாம். மற்றும் சிற்றம்பலம் அல்லது சிற்றுயிரின் ஆன்மவெளி (திருவள்ளுவர் பெருமான் சுட்டிய இறை ஒளிபாயும் இதயமலர்), பேரம்பலம் அல்லது ஞானப் பெருவெளி (உபநிடதங்கள் பேசும் கட்டற்ற ஆன்மா, பரவெளி ஆன்மா), பொன்னம்பலம் அதாவது இரண்டின் இணைவான பொன்னொளி (வள்ளலார் பெருமான் மேற்கொண்ட அருட்பெருஞ் சோதி) ஆகிய நுண்பொருள் மரபுகளும் தமிழில் மட்டுமே இச் சொல்லின் மரபுமலர்ச்சி விரிவுகளைக் காட்டுகின்றன என்பது காணலாம்.

ஆண்பாலாக மட்டுமோ, பெண்பாலாக மட்டுமோ குறிக்கப்பெற இயலாத தமிழ் மரபின் இறைவனாகிய அம்மை யப்பனைச் சுட்ட வேறு எந்த மொழியிலும் (சமக்கிருதத்திலும்) இல்லாத ‘அவர்' என்ற இருபாற் சுட்டான பால்பகா உயர்திணைச் சொல்லை உடைய உலகின் ஒரே தெய்வ மொழி தமிழ் என்று தமிழ்க் கவிஞர் பெருமான் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார் பாடியுள்ளார்!

மலையாள மாநில மரபில் அகத்திய கூடம் என்றும், அகல் இந்திய மரபில் மலையம் என்றும் வழங்கப்படும் தமிழினத் தெய்வத் திருமலை தமிழில் மேற்கண்ட ஊர்வெளி அல்லது அம்பலமரபு (இலத்தீனம் Forum, ஊர்வெளி, சந்தை வெளி, ஆராய்ச்சி அரங்கம்) குறித்த பொதியில் அல்லது பொதியம் என்ற பெயராலேயே சுட்டப்படுகிறது. இப்பொதிய மலையிலேயே என்றும் மூவா இளமையளாகிய தமிழன்னை சங்கம் வீற்றிருந்து விளையாடுவதாகக் கம்பர் பெருமான் தமிழ் மரபுச் சித்திரம் தீட்டியுள்ளார். கடல் கொண்ட தமிழகக் குமரிமலையின் பகுதியாகிய இந்தப் பொதியம் அல்லது அம்பலமே தமிழகத்தில் இன்றும் பேணப்படும் ஐவேறான பொன்னம்பலங்களின் தாய் மரபு மூலமான அல்லது தமிழினத்தின் தேசியப் பொதுநிலையான ஐம்பொன் அம்பலமாக நிலவியிருந்தது என்னல் தகும். மேலே சுட்டியபடி குடியரசு மரபின் மரபு மூலச் சின்னமான இப்பொது நிலை அம்பலத்தின் தெய்வமாகிய கன்னித்தாயின் மரபு விரிவினையே நாம் கன்னியாகுமரியின் கன்னி பகவதியம்மன், மதுரை மீனாட்சியம்மன், (ஒருவேளை கொங்கு நாட்டுச் செல்லாயி அம்மன்), காஞ்சி காமாட்சியம்மன், காசி