பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74 ||

அப்பாத்துரையம் - 14



நகர்-நாடு அரசு அல்லது குடியரசு மரபில் வந்த வேளிர் பண்டைத் தமிழக அதாவது தென்னக எல்லை கடந்து இந்திய, நாகரிக உலக மெங்குமே பரவியிருந்தனர். கன்னட, ஆந்திர, கலிங்க, மராத்திய, குசராத்திய எல்லை யெங்கும் பரவி ஆட்சி செய்த சளுக்கரும் மேற்கு, கிழக்கு, வடக்குப் பகுதிச் சாளுக்கியரும் இரட்டரும் (இராஷ்டிரகூடரும்) மேலைக் கங்கர் (பண்டை வடகொங்கமும் கொங்குநாடும் ஆண்டவர்) கீழைக்கங்கர் (கலிங்கம் ஆண்டவர்) ஆகியோரும் கி.பி.7ஆம் நூற்றாண்டு வரை வேளிராயிருந்து, பின்னரே அரசர், பேரரசராயினர் என்பது மேலே கூறப்பட்டது. தவிர, தமிழக அரசர் பேரரசர் வேளிர் ஆகியோருடன் போட்டியிட்டுக் கடலாட்சி செய்த குறும்பரும் ஆந்திரரும் கலிங்கரும் (பிற பண்டை வேள் நாடுகளின் ஆட்சி யாளர்களும்) வேளிர் அல்லது குடியரசுகளின் கூட்டிணைவு களாகவே (Republican Federations) நெடுங் காலம் ஆண்டவராவர். அம் மரபினர் பலர் உரோமனிய ஜூலியசு சீசரையும் (கி.மு.1ஆம் நூற்றாண்டு) பிரான்சுநாட்டு நெப்போலியனையும் (கி.பி.19ஆம் நூற்றாண்டு) போல, குடியரசுத் தலைவராயிருந்து அதைக் கைப்பற்றியே பேரரசராயினர்.

புத்தர்பிரான் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) பிறப்புக்குரிய சாக்கியமரபு, அதே காலத்துக்குரிய மகாவீரர் பிறப்புக்குரிய வைசாலிநகரம் (காசி விசாலாட்சியம்மனை நினைவூட்டும் பெயர்; விசாலாட்சி என்பதன் தமிழ் வடிவம். சாலி - நெல்) ஆகியவை முறையே குடியரசுக் குழுவாகவும் குடியாட்சி நகரமாகவுமே நிலவியிருந்தன. தவிர, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சிற்றரசன் நிலையில் (ஒருவேளை வேளிர் நிலையில்) இருந்த குப்த மரபினனான முதலாம் சந்திரகுப்தன் லிச்சாவியர் என்ற குடியரசுக்குழு மரபிலிருந்து பெண் கொண்டதன் பயனாகவே எளிதில் பேரரசுநிலை எய்தினான் என்று வரலாற்றாசிரியர் வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார். சங்ககாலத் தமிழக முடியரசர் (சேரர், கொங்குச் சேரர் உட்பட) மேற் கொண்ட வழக்க மரபை இது நினைவூட்டுகிறது. இதே மரபும் சூழலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பரப்பெங்கும் நீடித்திருந்தது என்பதையும் இது காட்டுகிறது.