பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78 ||

அப்பாத்துரையம் - 14



களின் தனித்தன்மைகளையும் இதுவே விளக்குவதாகும். ஏனெனில், அவை இவ்வூழியிலேயே மற்ற வேள்புல குடியரசுகளினின்றும் பிரிவுற்றன. ஆய் என்னும் சொல் குடியரசு மரபின் முல்லைநில மரபைச் சுட்டுகிறது. பின்னே விளக்க விருக்கிறபடி, பெண் இறைமையும் பெண் ஆட்சியும் பெண் வழிமரபும் மாறியமைந்ததும், முல்லைநில மரபு ஆட்சி மரபிலிருந்தே ஒதுங்கித் தனி மரபாகப் பிரிய நேர்ந்ததும் இம் முல்லைநில ஊழியிலேயேயாகும். மூன்றாவதாக வேள் என்ற சொல்லே, குடியரசுமரபின் முழுமலர்ச்சி காட்டும் சொல் ஆகும். குடியரசு மரபு மருதநிலத்திற்குத் தாவி, ஐந்திணை நிலங்களிலும் படர்ந்து பரவிய பேரூழி இதுவே. இது கீழே விரித் துரைக்கப்படவிருக்கிறது.

ம்

குடியரசுக்கும், முடியரசுக்கும் உரிய பொது மூலமரபு என்பது உண்மையில் மனித இன நாகரிக சமுதாய அரசேயாகும். இந் நாகரிக சமுதாய அரசும், அதற்குரிய அடிப்படையாயமைந்த மனித இன நாகரிக சமுதாயமும் நாகரிக உலகில் ஐந்திணை விரவிய நிலத்திலேயே தோன்றி வளர்ந்து தொடர்ச்சியறாத முழுநிறை மலர்ச்சியடைந்தது. முழு மலர்ச்சியடைந்த பின்னும் அத்தகைய ஐந்திணை விரவிய நிலமே அதன் மலர்ச்சியை இடையறாது ஊக்குவதற்குரிய உயிர் விதைப்பண்ணை யாகவும் அமைந்தது. இத்தகைய ஐந்திணை விரவிய தன்மை மேலே சுட்டப்பட்ட நாகரிக உலக உயிர் மண்டிலத்தின் கடல் மலை விரவிய நாடுகளுக்குரிய பொதுத்தன்மை ஆகும். அதேசமயம் அது பண்டைத் தமிழகத்துக்கும் அதன் அகல் விரிவாகிய இந்தியாவுக்கும், அதன் செறிவிறுக்கமாகிய கொங்குத் தமிழகத்துக்கும் சிறப்புப்பண்பு ஆகும். இதனை உணர்ந்தே பண்டைத் தமிழர் மலை வளப்பகுதி அல்லது குறிஞ்சி, காட்டு வளப்பகுதி அல்லது முல்லை, ஆற்றுவளப்பகுதி அல்லது மருதம், கடலோர வளப்பகுதி அல்லது நெய்தல் என்ற நானிலங்களையும், அவற்றுடனே வளமற்றது போலத் தோற்றுகிற, ஆனால் இனவளம் ஊக்கும் திறனுடைய புன்காடு, கரிசற்காடு அல்லது மணற்காடு ஆகிய பாலை என்பதையும் இணைத்து, மனித இன மலர்ச்சிக்குரிய நிலப்பரப்பை ஐந்திணைகளாக வகுத்துக் கண்டனர்.