பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 15

இதுகாறும் கூறியவற்றால் ஆங்கில சமற்கிருதப் பண்புகளுக்கும், கிரேக்க மரபுக்கும் மூலமான மரபே தமிழ் மலையாள நாடக மரபு என்றும், அதன் பண்பறிந்த பின்னரே சிலப்பதிகார நாடகப் பண்பை உணர முடிகிறது என்றும் கண்டோம்.

மலையாள மரபின் வரலாறு காண்பதன் மூலம் சிலப்பதிகாரத் தமிழ் மரபுடன் கிரேக்க மரபும் சமற்கிருத மரபும் கொண்ட தொடர்புகளையும் வளர்ச்சி முறைகளையும் நாம் இன்னும் மிகத் தெளிவாக உணரலாம்.

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்த் துறைகளிலே நாடகம்தான் மனித இனத்தின் முதல்கலை என்று கூறத்தகும். நாடகப் பண்பு குன்றிக் கவிதையும், கவிதைப் பண்பு குன்றி உரைநடையும் வளர்வதையே நாம் நாகரிகச் சமுதாயத் தின் கலை வளர்ச்சியில் காண்கிறோம். இவ்வளர்ச்சிப் போக்கில் கலைப்பண்பு குறைந்து வரலாமானாலும், கலையின் இயற்பண்பு அதாவது சமுதாய அறிவுப்பண்பு மேம்படுவது காணலாம்.

நாகரிகம் குறைந்த இனங்களில் நாம் உரைநடையையோ இலக்கியத்தையோ வளமாகக் காண்டல் மிக அரிது. ஆனால், அத்தகைய இனங்களில் கூட இசையையும் நாடகத்தையும் காணமுடியும். இஃது இயல்பே என்னலாம். ஆனால், நாடகக் கலை, இசைக்கலை வேறு நாடக இலக்கியம், இசை இலக்கியம் வேறு. நாடகக்கலையும், இசைக்கலையும் மொழியில் இயங்கக் கூடும். ஆனால், இங்கே கலை மொழியில் இயங்கினாலும், மொழி கலை சார்ந்து இயங்குவதில்லை. கலைப்பண்பு வாய்ந்த மொழியின் உருவமாகிய இலக்கியம் ஆவதில்லை. உலகின் பல நாகரிக இனங்களில் நாடகக் கலையோ, இசைக் கலையோ இருந்தாலும், நாடக இலக்கியமோ இசை இலக்கியமோ காணப் பெறாததன் காரணமும், உலக மொழிகளிடையே தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே நாடகக் கலையுடன் நாடக இலக்கியம் அல்லது நாடகத் தமிழும், இசை இலக்கியம் அல்லது இசைத் தமிழும் காணப்படுவதன் காரணமும் இதுவே. ஆயினும், நாகரிக முன்னேற்றத்தின் தொடக்கக் காலத்திலேயே நாகரிகம் தாண்டிக் கலை வளர்ந்த இனங்களில், நாகரிக முன்னேற்றத்துடன், முன்னேற்றமாக நாடகம் முதலிய கலைகளும் மேம்பட்டு