பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 15

சமற்கிருதத்தின் செல்வாக்குத் தளர்ந்தது. அதே சமயம் இராமாநுசரின் வைணவ இயக்கத்தால் தாய்மொழிகள் புதுவாழ்வு பெற்று வளர்ச்சியடைந்தன. இத்தறுவாயில் மலையாள நாட்டு நம்பூதிரிகள் சமற்கிருத நாடக அரங்கங்கள் ஏற்படுத்தி அதற்குப் புத்துயிர் ஊட்ட முயன்றனர். பொதுமக்களை அதில் ஈடுபடுத்துவதற்காக நாடகத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் தாய்மொழி கலந்த சமற்கிருத நடையை உண்டு பண்ணினர். நகைச்சுவைக்காகச் சமற்கிருதத்தில் தாய்மொழி கலந்த இந்த நடையே, விரைவில் சமற்கிருதம் கலந்த தாய்மொழி நடையாகிய மணிப்பிரவாளம் ஆயிற்று. நம்பூதிரிப் பார்ப்பனரின் இம்முயற்சியும், அதே காலத்திய பிற பார்ப்பனர் முயற்சிகளுமே, மலையாள நாட்டிலும் தெலுங்கு கன்னட நாடுகளிலும் வழங்கிய மூலத் தாய் மொழிகளான திசைவழக்குகள் அல்லது கொடுந்தமிழ் வகைகள் தமிழிலிருந்து பிரிந்து மலையாளம் முதலிய மொழிகளாகக் காரணமாயின.

மணிப்பிரவாள

நடை, தாய்மொழி வாழ்வைக் கெடுத்ததைவிட மிகுதியாகவே சமற்கிருத இலக்கிய வாழ்வைக் கெடுக்கக் காரணமாயிருந்தது. ஏனென்றால் தாய்மொழி கலந்த சமற்கிருதத்துக்கும், சமற்கிருதம் கலந்த தாய்மொழிக்கும், வேற்றுமை இல்லாமல் இரண்டும் ஒரே மணிப்பிரவாள மாயிற்று. இது தாய் மொழியின் பழைய பண்புகளையும் சமற்கிருதத்தின் பழைய பண்புகளையும் ஒருங்கே அழித்து, புதியதொரு பண்பை- கலப்புத் தாய்மொழிப் பண்பையே வளர்த்தது.

சமற்கிருத மொழியை வளர்க்க நம்பூதிரிகள் செய்த முயற்சி முழு வெற்றி பெறாவிட்டாலும், சமற்கிருத நாடகத்தின் இரு பண்புகளை அவர்கள் தம் தனிப் பண்பாக்கிக் கொண்டனர். ஒன்று மணிப்பிரவாள நடை, மற்றொன்று நாடகங்களின் மரபில் வந்த உரையிடையிட்ட பாட்டு நடை பின்னது மலையாளத்திலும் சமற்கிருதத்திலும் ‘சம்பூ’ நடைஎனப்பட்டது. இது நம்பூதிரிகளால் நாடகத்துக்கு மட்டுமன்றிப் புதிய காவியங்களுக்கும் பயன்படுத்தப் பட்டது. பாரத சம்பூ, இராமாயண சம்பூ என்பவை போன்ற சம்பூ காவியங்கள் இரு மொழிகளிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை நூற்றுக் கணக்கில் எழுதிக் குவிக்கப்பட்டன.