பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 15

தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. போன்ற உயர்ந்த பட்டங்கள் பெறுபவர்கள் சிலப்பதிகாரத்தைப் பழந்தமிழ் இலக்கியமாகப் பயில்வதுபோலவே, மலையாள இலக்கியத்தில் உயர் பட்டங்கள் பெறுபவர்களும் அதனைப் பழைய மலையாள இலக்கியமாக இன்றும் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சிலப்பதிகாரம் ஒரு சாக்கையர் கூத்து என்பது மறக்கப்பட்டதற்கும் அஃது இராமாயண நாடகமாக மாறியது ஒரு காரணம். ஆனால், தெருக்கூத்தின் வளர்ச்சியே அருமுயற்சி வேண்டிவந்த இப்பழங்கலை அழிவதற்குக் காரணம் என்னலாம். ஆயினும், ஒரு சின்னஞ்சிறு குழுவினுள்ளாவது சிலப்பதிகாரம் பேணப்பட்டே வந்திருந்தது என்பதில் ஐயமில்லை. சமண சமயச் சார்புள்ள சிந்தாமணி போன்ற காவியங்களுடன் சேர்த்து அது பண்டைய ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகச் சமணரால் பேணப்பட்டு வந்தது. 12 முதல் 16ஆம் நூற்றாண்டுவரை இருந்துவந்த உரையாசிரியர்கள் அனைவரும் அதை மேற்கோளாகவோ, இலக்கண மரபுகளுக்கு எடுத்துக்காட் டாகவோ சுட்டியுள்ளனர்.

கண்ணகி வணக்கமும், சிலப்பதிகாரக் கதையும், தமிழகத்திலும், தமிழகத்துக்கு வெளியேயும் பாரத இராமாயணம் பரவியபின்கூட முற்றிலும் அழியாமல் இன்றளவும் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றே வந்துள்ளது. வில்லுப்பாட்டாகவும், அம்மானையாகவும், தெருக்கூத்தாகவும் தமிழகத்தில் அது வழங்காத காலம் இல்லை என்னலாம். அம்மானை நூல்கள் அச்சிலேகூட வெளி வந்து சிலநாள் உலவியதாக அறிகிறோம். கன்னட நாட்டுக்கப்பால் கோவாவில் உலவிய மக்கட் கதைகளில் ‘சந்திராவின் பதி' என்ற பெயருடன் மிகத் திரிபுற்ற உருவில் 1868- ல் இது வெளியிடப்பட்டுள்ளதாக உயர்திரு எஸ்.வையாபுரிப் பிள்ளையவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கண்ணகி கோவில் மலையாள நாட்டிலுள்ள கொடுங்கோளூரில் பகவதி கோவிலாக இன்று நிலை பெறுகிறது. பகவதியம்மன் இன்னும் ஒற்றை முலைச்சி என்று குறிப்பிடப் படுவதாகவும், வாழ்விழந்ததற் கறிகுறியாக இன்றும் அங்கே மஞ்சள், குங்குமம் வழங்கப்படுவதில்லை என்றும் சிலப்பதி காரத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்த பெண்பாற் புலவர் அம்மாளு அம்மா அவர்கள் குறித்துள்ளார்கள்.