பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

7

வேறுபாடுகளுக் கேற்பக் கம்பர் கட்சி என்றும் பெரிய புராணக் கட்சியென்றும் ஒட்டக் கூத்தர் கட்சியென்றும் தனி நூல்கள் சிறப்பிலீடுபட்ட கட்சிகள் எழுந்து பூசலிடவும் செய்கின்றன. ஆனால் பல சமயங்களின் பூசல்களிடையே ஒரு திருக்குறள் மிளிர்வதுபோல் இப் பலகட்சிகளிடையேயும் ஒற்றுமை விளைவிப்பதாயுள்ளது சங்க இலக்கியம்.

கம்பர் அடியார் கம்பரையும், சேக்கிழார் அடியார் சேக்கிழாரையும் எவ்வளவு பெருமையுடையவராகக் கருது கின்றனரோ, அவ்வளவு கம்பரும் சேக்கிழாரும் சங்க இலக் கியத்தைப் பெருமையுடையதாகக் கொண்டனர் என்பதும், அக்கம்பரும் சேக்கிழாரும் மட்டுமன்றி அச்சங்கப் புலவரும் திருவள்ளுவரை உச்சிமேற் கொண்டனர் என்பதும் கருதத் தக்கது. கவிதைச் சிறப்பிலும் பிற்காலக் கவிராயர்கள் கம்பரையும் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சங்கப் புலவரையும் திருவள்ளுவரையும் பின்பற்றினராயினும் அவர்கட்கு ஒப்பாக வில்லை யென்பது மிகையாகாது.

இந்நிலையில் சங்க இலக்கியம் கட்சிகளின் எல்லை கடந்த முழு ஒற்றுமையை நாட்டம் தமிழின் நாட்டுரிமை இலக்கியமாக நிலவுகிறது. தமிழின் இடைக்கால பிற்கால நூல்களைச் சிறப் பிப்பவர் அந்நூல்களைப் பிறமொழி நூல்களுடன் ஒப்பிட்டுச் சிறப்புக் கூறுகின்றனரேயன்றித் தனித்தமிழ்ச் சங்க இலக்கியத் துடனோ திருக்குறளுடனோ அல்ல என்பதைத் தமிழர் கவனித்தல் வேண்டும்.தமிழின் இடைக்கால பிற்காலங் கட்குரிய முதனூல்கள் கூட உலகின் பிற முதன்மைவாய்ந்த இலக்கிய முதனூல்களுக்கு ஈடு செலுத்தக் கூடியவை என்பதில் ஐயமில்லை. இஃது உணரப் பட்டால் இப்பூசல்கள் பொருளற்றன வாய் விடுவதுடன் பெருமைக்கும் பெருமை தரும் சங்க இலக்கிய மாண்பும் உள்ளவாறு உணரப்பட்டுவிடும்.அந்நாள் விரைவில் வருமாக.

இடைக்கால பிற்கால நூல்களைப் போற்றுபவர் போற்றுக. ஆனால் முன்னூல்களே தமிழர் புகழின் கொடு முடி யென்பதை மறவாதிருப்பார்களாக.

இருண்ட டைக்காலம் அல்லது புராணகாலம்

சங்க இலக்கிய வாழ்வுக் காலம் முடிவற்ற பின்பே பிற்காலத் தமிழிலக்கிய வாழ்வு தொடங்கிற்று என்பதை யாவரும் அறிவர்.