பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

9

பெருஞ்செல்வம். தாய் வணங்காமுடியரசி; மகளிடம் அப்பெருமையில்லையென்பதுமட்டுமன்று; இருக்குமளவு பெருமையும் சிறிது சிறிதாகக் குறைந்து, வணங்கவேண்டுமா, வேண்டாமா என்ற சிந்தனைக்கு இடமேயில்லாமல், வணங்க வேண்டுவது யாரை என்ற சிந்தனை ஏற்பட்டு விட்டது. தாயின் உடல் நிமிர்ந்து நிலை பெற்றது. ஏனெனில் அதற்கு உறுதியான முதுகெலும்பு உண்டு. ஆனால் மகளுடலில் முதுகெலும்பு தவிர மற்றெல்லாம் உண்டு. தாய் இயற்கையழகும் பொலிவும் வாய்ந்தவள். மகளின் செயற்கை அழகு முறைகளும் போலி அணிகலன்களும் அவளது பொலிவின்மையைத் தான் எடுத்துக் காட்டுகின்றன.

தாயிலக்கியத்தின் தன்மையைப்

பேணமுடியாத

நிலையில் பின்னிலக்கியம் அதன் புகழை அவாவிப்பேணியதில் வியப்பில்லை. சங்க இலக்கியங்களினும் முற்பட்டதாகிய திருக்குறளைச் சங்க இலக்கியங்கள் தாமும் பெயர் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் எடுத்தாண்டு சிறப்பிக்கத் தயங்கியதில்லை. அதுபோலவே தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தொல்பழமை வாய்ந்த நூல்களின் உரைகளும் சங்க நூல்களின் உரைகளும் இடைக்கால, பிற்கால இலக்கியங்களில் எடுத்தாண்டு போற்றப்படுகின்றன. இங்ஙனம் எடுத்தாளப் படும் இடங்களையெல்லாம் புலவரும் மாணவரும் தேர்ந்து ஒப்பிட்டுப் பார்த்தால், பிற்காலத்தவர் விரித்தும் பதுக்கியும் பல படப்புனைந்தும் கூறினும், இலக்கியத் தலையூற்று தலையூற்றாகவே இருப்பதைக் காண்பர்.

இயற்கையுடனும் வாழ்வுடனும் ஒன்று பட்ட நின்ற சங்ககாலப் புலவர்கள் அவற்றுடன் தொடர்புடைய ய படைப்புக் கலையிலேயே ஈடுபட்டனர். பிற்காலப் புலவரோ இயற்கையையும் வாழ்வையும் ஊன்றிக் கவனியாது சங்க காலக்கவிதையின் கருத்துக்களையும் புறப்போர்வைகளை யும் புதுக்கிப் பெருக்கி அவற்றினூடாகவே இயற்கையையும் வாழ்வையும் தீட்டினர். சங்க கால இலக்கியக் காட்சிகள் உயிரோவியங்களாகவும் அறிவு, உணர்ச்சி கலந்த ஓவியங் களாகவும் விளங்குகின்றன. பிற்காலத்தவை பெரிதும் சொல்லோவியங்கள் மட்டுமே. கனிமலர்ச் சோலைகளினிட மாக இலை நிறை காட்டையே பிற்காலத்திற் காண்கிறோம். நாளடைவில் அவ்விலைகள் தாமும் தாளிலைகளாகத் திரிபுற்றன.