பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

தமிழர் வாழ்வு, ஒரு பரந்தகன்ற விளைநிலம்; அதற்கு வளந்தரும் வானவெளி தமிழ்ப் பண்பு. அம் மழைச்செல்வத்தைத் தேங்கிக் கொண்டிருக்கும் வானம் பார்த்த ஏரி தமிழிலக்கியம். அதன் பரப்பு கடல் போன்றது. ஆயினும், அதன் கரையோரப் பகுதிகள் ஆழம் குறைந்தவை. வறட்சிக் காலத்தில் அவை காடுமேடாகவும், முட்புதர்களாகவும், மணல் வெளியாகவும் காட்சியளிக்கின்றன. சற்று ஆழமிக்க பகுதிகள்கூடச் சேறும் சகதியுமாகச் சில வேளைகளில் இயல்கின்றன. ஆனால், எக்காலத்திலும் வற்றாத தண்ணறுஞ் சுனையாய் இலங்கும் ஆழ்தடம் ஒன்று ஏரியின் ஒருகோடியி லிருக்கின்றது. அதுவே, தமிழ்ப் பண்பின் வளம் குன்றாச் சேமநிதியாகிய சங்க இலக்கியம்.

சங்க இலக்கியச் சுனையருகே, அச்சுனைக்கே உயிர் தருபவை போன்ற மூன்று கேணிகள் உள்ளன. அவை, நிலத்தின் அகடு நீண்டு ஆழ்ந்து செல்பவை. அத்துடன் அவை பண்பின் சேமவைப்புகள் மட்டுமல்ல; பண்பின் ஊற்றுகள். அவை வற்றாத ஊற்றுகள் மட்டுமல்ல; இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுகள்கூட அல்ல: இறைக்காமலே நீரை ஓயாது கொப்புளிக்கும் உயிர்த் துடிப்புடைய பொங்கல் ஊற்றுகள் அவை. தமிழர் பொங்கல் வாழ்வின் வாடாத பழம், புதுச் செல்வங்களான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய பொன்னேடுகளின் உருவில் அப்பொங்கல் ஊற்றுகள் வருங்கால வாழ்வுக்கான

வளமூட்டிவருகின்றன.

வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்று

பழைய ஏடுகள்தாம் இவை மூன்றும்! ஆனால், மூன்றும் புதுமைக்குப் புதுமை அளித்துவருகின்றன, வருவன. தமிழர் மறுமலர்ச்சியின் இதழ்கள் அவிழுந்தோறும், உலகில்,