பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 15

ஆண்டுகளாகப் பொது மக்களாலும் புலவராலும் முற்றிலும் மறக்கப்பட்ட செல்வமாக இயங்கிற்று.

சிலப்பதிகார ஆசிரியரையோ, நூலையோ, நூலின் சொற்றொடர்களையோ, கருத்தையோ எடுத்தாண்ட புலவர் யாரும் கிடையாது. அது பாரதி ஒருவரே கண்ட - ஆனால், கம்பர் காணாத, சேக்கிழார் கேளாத, அதிவீரராம பாண்டியர் அறியாத - கலைச் செல்வமாக இயங்கி வந்துள்ளது.

மங்கி ஒளி வீசினும் வாடாத வட மீனாக இயங்கிற்று, தொல்காப்பியம். மங்காது ஒளி வீசினும் பனி மூடிய கதிரவனாக விளங்கிற்று, திருக்குறள். ஆனால், சிலப்பதிகாரமோ மறையுவாவின்போது முற்றிலும் மறைவுற்ற முழுமதியாய் இயங்கிற்று.

காணாத, கேளாத உரைப் பண்பு

தொல்காப்பியத்தின் புகழுக்கும் திருக்குறளின் புகழுக்கும் மாறான மற்றுமொரு செய்தி சிலப்பதிகாரத்தின் புகழுக்கு உண்டு.

முதலிரண்டையும் தமிழர் பேணினர் - மொழிப்பற்றுடைய தமிழர் ஒன்றை அதன் முழு உருவும் திருவும் அறியாது உரை செய்து உரை செய்து உண்மைப் பெருமை விளங்காமலே பேணினர். மற்றொன்றை மொழிப்பற்றுக் குன்றிய ‘தமிழர்’ உறையிட்டு உறையிட்டு மூடி மறைத்தும் உருமாற்றியும் கைவிடாது பேணினர். ஆனால், சிலப்பதிகாரத்தை இரு சாராரும் பேணினர்.ஆனால், முற்றிலும் மறந்தே விட்டனர். ஆயினும், மூன்றாவது ஒரு சாரார் தமிழகத்திலே புறக்கணிக்கப்பட்ட ஏதோ ஒரு வகுப்பினர் சமணர் உட்பட்ட சில பழைமைப் பூச்சிகள் - அதை வைத்துப் பேணினர். பேணியது மட்டுமோ? அதற்குத் தமிழகம் இதுவரை - இன்று வரை - அறியாப் பண்புடைய அருமை பெருமைகொண்ட உரைகள் செய்தனர். திருக்குறளின் ‘உறை'யான உரைகளைப் போல அவை மறைக்கவில்லை. தொல் காப்பியத்தின் உரைகளைப் போல அவை மயங்கவில்லை, மருளவில்லை-அவை துணிந்து சிலப்பதிகாரத்துடனேயே போட்டியிட முனைந்தன! சிலப்பதி காரத்தின் புகழுக்கு அவை புகழ் ஊட்டின. இன்று சிலப்பதிகாரம் நமக்கு எவ்வளவு அரிய கருவூலமோ அதனினும் ஒரு சிறிதும் குறைந்த கருவூலங்களல்ல,