பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

39

இருட்டடிக்கப்பட்டது-அறிஞர் உள்ளங்களுக்குள்ளேயே திரையிடப்பட்டது - இன்றும் இருட்டடிக்கப்பட்டு, திரை யிடப்பட்டே வருகிறது!

போதாக் குறைக்கு எல்லாத் தாய் மொழிகளின் மீதும் திராவிட மொழிகள், ஆரிய மொழிகள் ஆகிய அனைத்தின் மீதும் உலக அரங்கின் நோக்கு என்ற கதிரொளி அவற்றின் மீது படாமல் சமற்கிருதம் என்ற வழக்கிறந்த - உண்மையில் என்றுமே வழக்கில் இடம் பெறாத -மொழியின் நிழல், அன்று தடுத்தது - இன்றும் தடுத்தே வருகிறது!

இந்த நிலைக்குப் பெரிதும் உதவிய சூழ்நிலை வேறு ஒன்று உண்டு. அரை நூற்றாண்டுக்குமுன் திருக்குறளும், நாலடியாரும், தொல்காப்பியமும் நீங்கலாகப் புலவர் உலகில் அறியப்பட்ட ஏடுகள் கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவையும் அவற்றுக்குப் பிற்பட்ட ஏடுகளுமே. அறிஞர் கால்டுவெலும், போப்பும் தமிழ்க்கு இந்திய மொழிகளிடையே தனிப்பெரும் உயர்வு தந்தவர்கள் தாம். ஆனால், அவர்கள் அறிந்த தமிழ் சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் நீங்கலான பிற்காலத் தமிழே ஆகும். இவற்றை வைத்துக்கொண்டே அவர்கள் தமிழ்க்கு அம்முதன்மை அளித்தனர். சங்க இலக்கியமும், சிலப்பதி காரமும் வந்தபின் இந்த நிலை பெரிதும் மாறுபட்டுப் புரட்சிகரமாக வளர்ந்திருத்தல் வேண்டும். ஏனென்றால், சங்க இலக்கியங்கள் சமற்கிருத இலக்கியத்தைவிட மிகவும் பழைமையானவை. பல நூற்றாண்டுக் கணக்கில் பழைமை யானவை. அத்துடன் சமற்கிருத இலக்கியத்தைவிட அவை பன்மடங்கு பண்பில் உயர்ந்தவை. தவிர சங்க இலக்கியம் காட்டும் தமிழ்த் திராவிட நாகரிகம் சமற்கிருத இலக்கியம் காட்டும் இடைக்கால வட இந்திய நாகரிகத்தைவிட ஆயிரமடங்கு உயர்வுடையது. இச்சிறப்புத் தகுதிகள் தமிழ்க்கு உலகில் சமற்கிருத மொழி தாண்டி, கிரேக்க இலத்தீன மொழிகள் தாண்டி, உலகின் முதல் மொழி என்ற சிறப்பைத் தந்திருத்தல் வேண்டும். அது கீழை உலகில் தலைசிறந்த பழைய மொழி மட்டுமன்று, அனைத்துலகின் தலைசிறந்த பழஞ்சிறப்புடைய செம்மொழி - அத்துடன் அனைத்துலகின் புதுச் சிறப்பும் குன்றாத புது மொழி என்ற ஒப்புயர்வற்ற நிலை அதற்கு இயல்பாகவே ஏற்பட்டிருத்தல் வேண்டும்.