பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் – 15

மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ! தாழிருங் கூந்தல் தையால்!

இந்த அடிகளுக்கு உரை வேண்டுமா? உரை நடையின் தெளிவு, நாடகத்தில் வரும் நடிகனின் உணர்ச்சி, காவியச் சாற்களில் காணப்படும் பொருள் நயம், அணி நயம், இன்னிசையில் எழும் இனிமை நயம், அலை எழுந்து எழுந்து தாழ்ந்து உயரும் ஓசை நயம் ஆகிய இத்தனையும் முயற்சி இல்லாமலே இவ்வடிகளில் இழைந்து அதிர்வதை உணரலாம். இன்னும் சிறிது உற்று நோக்கினால், நடிகன் சொற்களிலே இல்லாத, நடிப்பிலே மட்டும் ‘காணக்’ கூடிய கூடிய ‘காட்சி’ப் பண்புகள்கூட அடிக்கு அடி,சொல்லுக்குச் சொல் மிளிர்வதைக் காணலாம். இக்காட்சிப் பண்புகள் நாடகத்துக்குரியவை. சிலப்பதிகாரம் நடிப்பதற்கும் கேட்பதற்கும் உரியதேயன்றி வாசிப்பதற்கு உரியதன்று என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழகப் புதிர்களுள் ஒன்று

பரத நாட்டியம் பயில்பவர் இந்த அடிகளை நடித்துக் காட்ட முன் வாராதது தமிழகப் புதிர்களுள் ஒன்றே என்று கூறுதல் வேண்டும். பரத நாட்டியம் தமிழர் கையிலிருந்தாலும் அதன் தலைமையும் உரிமையும், அதனை இயக்கும் ஆற்றலும் இன்னும் தமிழர் கைக்கு வரவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுகின்றது.

இத்தகைய அடிகளைப் பரதநாட்டியமாக்கிக் காட்டினால் அவை, அடிக்கு அடி, சொல்லுக்குச் சொல் பரத நாட்டிய முத்திரைகளுக்கு இசைய அமைந்தவை என்பது விளங்கும். அவை கண்ணகியின் உருவையும், அதைக் கண்ட கோவலன் உள்ளக் கிளர்ச்சியையும் சொல், சொல் குறிப்பு, ஓசை, சந்தம் ஆகிய எல்லாத் திறங்களிலும் வாசிப்போர், கேட்போர் கண்களின் முன்னும், கருத்தின் முன்னும் கொண்டுவருபவை ஆகும். மற்றும், அவற்றின் ஓசை கண்ணகியின் அங்க அசைவையும் கோவலன் உள்ளத்தின் அசைவுகளையும்கூட நம் காதுகளில் அலைபாயச் செய்கின்றன.