பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

47

இயல், இசை, நாடகம் ஆகிய மூவகை மொழி சார்ந்த கலைப் பண்புகளும் இந்த அடிகளில் கலந்து துடிக்கின்றன. இந்த அடிகளில் மட்டுமல்ல; மங்கல வாழ்த்து முதல் வரந்தரு காதைவரை காதைதோறும், அடிதோறும் இம் முத்திரைப் பண்புகளைக் காணலாம்.

இவ்வகையில் முத்திறப் பண்புகளும் வாய்ந்த அடிகளைத் தமிழில் வேறு எந்த நூலிலோ - உலகில் வேறு எந்த மொழியின் ஏட்டிலோகூட எளிதில் காண முடியாது.

இந்த மூவகைப் பண்புகளுந்தாம் சிலப்பதிகாரத்துக்கு வாசகர் உள்ளத்தில் இன்னதென்று தெளிவாக விளக்கப்பட முடியாத-வேறு எந்த நூலாலும் உண்டுபண்ண முடியாத மாய உணர்ச்சியை, கிளர்ச்சியை, உணர்வு அலை இயக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

டைக்காலமும் இக்காலமும்

இத்தகைய நூலைத்தான் தமிழர் - இடைக்காலத் தமிழர் தேவார கால முதல் திருவருட்பாக் காலம்வரை வாழ்ந்த தமிழர் மறந்திருந்தனர். இத்தகைய நூலைத்தான் கம்பர் காலத் தமிழன் காணவில்லை, பெரிய புராண காலத் தமிழன் பேணவில்லை- கவிராயர் காலங்கள் கருத முடியவில்லை! அக்காலத் தமிழர் தமிழ்ச்சுவை இருந்தவாறு என்னே!

நூல் வெளி வந்த பின்னும் ஒரு தலைமுறைவரை இந்தத் தமிழ் வகையில் தமிழர் பெரும்பாலும் காணாக் கண்ணினர், கேளாக் காதினராகவே இருந்தனர்.

ஆனால், இன்று நாம் காண்கிறோம், கேட்கிறோம். கண்டுவருகிறோம், கேட்டுவருகிறோம். ஏனெனில், நாம் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்கிறோம். மறுமலர்ச்சியின் முதல் அலைமுகட்டில் நாம் மிதக்கிறோம். அந்த மறுமலர்ச்சியை ஊக்கியது, ஊக்கி வளர்த்தது, வளர்த்து வருவது சிலப்பதி காரமே - அதற்கு இன்னும் உயிர் கொடுத்து வளந்தருவது அந்நூலே. அந்நூல் தந்த உணர்வே அந்நூலைக் காண, கண்டு நுகர நமக்கு வழி வகுக்கின்றது. அந்நூலை உணர உணரத் தமிழர் நுகர்வுத் திறமும் அறிவுத் திறமும் இன்னும் விரிவு பெறும்.