பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் – 15

காலங்கடந்த உணர்வு, கவிஞனின் வருங்காலக் கனவுணர்வு என்பதில் ஐயமில்லை. ஆயினும் பாரதியார் பாடலில் இப்பண்பைத் தமிழர் கண்டு நுகர்வது இன்றுதான் - நம் மறுமலர்ச்சிக் காலத்தில்தான் - பாரதியார் காலத்தில் அது வெறும் உபசாரப் புகழ்ச்சியாக மட்டுமே அமைந்திருந்தது.

அத்துடன் சிலப்பதிகாரத்தைப் புகழ்ந்த கவிஞர் அதன் கதையை -சொற்களை பண்புகளை எடுத்தாளவில்லை. புகழ்ச்சி வெறும் புகழ்ச்சியாகவே நின்றது. அவர் ஈடுபட்ட கதை, அவர் கவிதைக்குத் தூண்டுதல் தந்த காவியப் பின்னணி சிலம்புக் கதையோ, தமிழகப் பின்னணியோ அன்று. இராமன் கதை, கண்ணன் கதை முதலிய பிறநாட்டு, பிறமொழிக் கதைகள், பிறநாட்டு பிறமொழிப் பின்னணிகளிலேயே அவர் முழு ஈடுபாடு

கண்டார்.

இராமாயண, பாரத ஆராய்ச்சி

மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கண்ணோட்டத்தையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும் இராமாயண பாரதங்களின் மீது பரவி ஓடவிட்ட பெருந்தலைவர்கள் நாவலர் பெருந்தகை சோமசுந்தர பாரதியாரும், சொற்செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளையுமே ஆவர். கம்பரும் வில்லிப்புத்தூராரும் வடவர் கதைகளின் பின்னணியாகத் தரும் தமிழ்ப் பலகணிகளைத் திறந்து வைத்து, அவற்றின் மூலமாக அவர்கள் அந்நூல்களின் சிறைக் கூடத்துக்குள்ளேயே தமிழ்த் தென்றலைப் பாயவிட்டு, தமிழ் வாழ்வையும் அறிவையும் வளர்த்தார்கள். நாவலரின் நுண்ணறிவுடன் சொற்செல்வரின் கலைநயம் இழைந்து சிலப்பதிகாரத் தமிழ்க்கு ஏணி வைத்தது.

சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பதிப்பு முதன் முதலாக நாட்டில் எழுந்து வந்த புத்துணர்ச்சியைப் பயன்படுத்திற்று. இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் 'சிலம்புச் செல்வம்' என்ற கலையாராய்ச்சி நூல் சிலப்பதிகாரத்தின் காலம், சிறப்பு, பண்புகள் ஆகியவற்றில் தமிழ்ப்புலவர் உள்ளங்களையும், தமிழ் இளைஞர் நங்கையர்களின் கவனத்தையும் திருப்பிற்று. அத்துடன் சிலப்பதிகார வகுப்புகள், இளங்கோ மன்றங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பெருக்கமடைந்து வருகின்றன.