பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

57

(கவீநாம் உஷநாகவி:) என்ற முறையில் புகழப்பட்ட உலக முதற் கவிஞர் இவரேயாவார்.

குணாட்டியர் நூலின் ஒரு பகுதி தழுவிய தமிழாக்கமே கொங்குவேளிர் இயற்றிய 'தமிழ்ப் பெருங்கதை'. சமற் கிருதத்திலும் இதுபோல ‘பிருகத் கதா', ‘பிருகத்கதா மஞ்சரி’, 'கதா சரித் சாகரம்' முதலிய பெயர்களால் பல அரைகுறை மொழிபெயர்ப்புத் தழுவல்களும் திரிதல்களும் எழுந்துள்ளன.

சேக்கிழார் நூல் 'பெரியபுராணம்' என்று பெயர் பெற்றுள்ளது. கம்பர் தம் காவியத்தை ‘மாக்கதை' என்றே குறிப்பிடுகிறார். பாரதம் ‘மகாபாரத'மென வழங்கப்படுகிறது. இப்பெயர்கள் 'பெருங்கதை'யின் மரபில் வந்த பெயர்கள். பெருங்கதையின் புகழுடன் போட்டியிட்டு அதைத் தனதாக்கும் முயற்சியில் எழுந்த பெயர்களே இவை.

பெருங்கதையும் முத்தொள்ளாயிரமும்

சிலப்பதிகாரத்தின் தனிப் பண்புகளைப் பிரித்தெடுத்து உணர்த்துவதனால், அதனுடன் நெருங்கிய உறவுடைய இரு நூல்களின் பண்புகளை ஒருங்கு இணைத்துக் காணுதல் வேண்டும். ஒன்று தமிழ்க் கொங்குவேள்மாக் கதை. மற்றொன்று முத்தொள்ளாயிரம். இரண்டும் நமக்கு முழு நூல்களாகக் கிட்டவில்லை - இரண்டும் அரைகுறைகளே. ஆனால், கம்பர் காவியம், சிந்தாமணி ஆகிய முழுநூல்களில் காணப்பெறும் 'முழுமை'யைவிட இத்துண்டு நூல்களில் காணப்படும் 'முழுமை' முனைப்புடையதே. பெருங்கதையில் சொல்வளம், வருணனைச் சிறப்பு, பாரகாவியப் பண்பாகிய வீறுடைமை ஆகிய கூறுகளைக் காணலாம். இவை திருமலை நாயக்கன் மஹாலைக் காண்பவர்கள் உள்ளத்தில் ஏற்படும் வீறியல் உணர்ச்சியை நமக்குத் தருவன. ஆனால், முத்தொள்ளாயிரத்தில் இயற்கை எளிமை, ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞரின் மேன்மை, தேனினிமை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் விழுமிய ஓசை நயத்தில் நாம் பண்டைத் தமிழகத்தின் மறைந்த மாயக் கவிதைக் கலையின் மர்மத்தை ஓரளவு நுகர்கிறோம். 'வெண்பாவில் புகழேந்தி' என்ற இடைக்காலப் பழமொழியைப் பொய்யாக்கும் மாய வெண்பா இசை இங்கே நம் கருத்தைக் கவர்கிறது.