பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

59

கவிதை, வசை இலக்கியம், புனைகதை, நாடகம், சிறுகதை, கட்டுரை முதலிய எத்தனை எத்தனையோ இலக்கியத் துறைகள் செழித்தோங்குகின்றன. ஒவ்வொரு மொழியும் இவற்றுள் ஒன்றும் பலவும் வளர்த்துப் பீடு பெறுகின்றன.

கலைகளில் சிறந்தது இலக்கியம். இலக்கியத் துறைகளில் சிறந்தது நாடகம் என்று பண்டைத்தமிழர் கருதினர். முத்தமிழில் அதைத் தனித் துறையாக, மற்ற இரண்டும் உள்ளடக்கிய உயர் துறையாக அவர்கள் வகுத்திருந்தனர். சமற்கிருதவாணரும் அதே கொள்கையுடையவராகவே இருந்தனர் என்று அறிகிறோம். 'காவியங்களுள் சிறப்புடையது நாடகக் காப்பியம்' (காவ்யேஷீ நாடகம் ரம்யம்) என்பது சமற்கிருதக்கலைவாணரிடையே வழங்கும் ஒரு பழம் பாடல் தொடர் ஆகும். இக் கருத்தை அவர்கள் செயலிலும் காட்டத் தவறவில்லை. சமற்கிருத இலக்கியத்தில் ஒரு மாபெரும் பகுதி நாடகமேயாகும். சமற்கிருதக் கலைஞர், கலையாராய்ச்சியாளர் காவியங்களில் காட்டிய அக்கறையைவிட நாடகங்களில் காட்டிய அக்கறையே மிகப்பெரிது. நாடகங்களும் சமற்கிருத இலக்கியத்தில் மிகப்பல. மிக உயர்ந்த பண்புகளும் உடையவை.

உலக நாடக இலக்கியம் : மூன்று மொழி மரபுகள்

உலக இலக்கியத்தில் நாடக இலக்கியத்தின் இடம் பெரிது. ஆனால், அதன் அளவு பெரிதன்று. உலக நாடக இலக்கியத்தில் டம் பெறத் தக்க அளவு உயர்ந்த, பேரளவான நாடகக் கலைகள் வளர்த்த மொழிகள் ஒரு சிலவே.

பல நாடுகளில் மக்களிடையே நாடகக் கலைக்கு மிகுந்த செல்வாக்கு இருந்து வந்துள்ளதானாலும், அது பெரும்பாலும் இலக்கியத் தொடர்பும் மக்கள் தொடர்பும் அற்ற பணம் திரட்டும் தொழிலாகவேதான் இன்று வரை நடைபெற்று வருகின்றது. இலக்கிய முறையிலே கலை நாடகம் வளர்த்த பெருமையுடைய மொழிகளுள் சிறந்தவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்காண்டினேவியா, கிரேக்க இலத்தீன் மொழிகள், சமற்கிருதம், சீனம், ஜப்பான் மொழி ஆகியவையே. இவற்றுள்ளும் தலைமை நிலையும் முதன்மை நிலையும் உடைய மொழிகள் மூன்றே மூன்றுதாம்- ஆங்கிலம், கிரேக்கமொழி, சமற்கிருதம் ஆகியவையே.