பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 15

பண்பு மிகுதியுங் கெடாமல் இன்றும் நடிக்கப்பட்டுவருவது காணலாம். உயிருள்ள நடிகர்க்குப் பதிலாக, சில சமயம் புரோகிதரும், சில சமயம் உருவங்களும் இங்கே பயன்படுத்தப் படுகின்றன.

கத்தோலிக்க விழாக்களில் நாடகப் பண்பு இன்னும் முனைப்பாகத் தெரிகின்றது. ஊர்வலமாக வரும் ஒவ்வோர் உருவமும் இன்னும் இயேசுவின் வாழ்வில் ஒரு காட்சியை நினைவூட்டவல்லது. ஆனால், முன்னாள்களில் உருவங்களை இழுத்துச் சென்ற சகடங்கள் உருண்டோடும் மேடைகளாய் இருந்தன என்று அறிகிறோம். உருவங்கள் இன்று உயிரற்ற பொம்மைகளாய் விட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவற்றிடமாக உயிருடைய நடிக நடிகையர் நடித்திருந்தனர் என்று அறிகிறோம்.

ஆங்கில நாடக மரபு

யேசு

விழாக்காட்சி நாடகங்களை ஆங்கிலத்தில் வாழ்க்கை நாடகங்களாகிய மறை நாடகங்கள், சமயத் திருத்தொண்டர் கதைகளாகிய திருவிளையாடல் நாடகங்கள், நொடிக்கதை நாடகங்கள் என்ற படிகளாக வகுத்துக் காட்டுவர். மறை நாடகங்கள் முதலில் கோவில்களிலும் பின் ஊர்வலக் காட்சிகளிலும் காட்டப்பட்டன. கோவில் குருக்கள் நாளடைவில் இவற்றின் பொறுப்பை வணிகக் குழுக்கள் அல்லது சாத்துகளிடம் விட்டனர். மக்கள் ஆர்வமறிந்து அவர்கள் அதைப் படிப்படியாகத் திருவிளையாடல் நாடகங்கள், ஒழுக்கப் பண்பு நாடகங்கள், நொடிக்கதை நாடகங்கள் என்ற முறையில் வளர்த்தார்கள். இவையே மக்கட் கலையாக வளர்ந்து இலக்கிய வடிவடைந்து ஷேக்ஸ்பியர் கால நாடகமாக 1580-க்குள் வளர்ச்சியடைந்தன என்று அறிகிறோம்.

ஷேக்ஸ்பியர் கால ஆங்கில நாடகம் இங்கிலாந்தில் இயற்கையாக வளர்ந்த கலையானாலும், அதற்குக் கடைசிக் கட்டத்தில் முன் மாதிரியாக உதவியவை இலத்தீன் கிரேக்க நாடகங்களே. இவை ஷேக்ஸ்பியர் காலத்துக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டவை.