பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

கிரேக்க மரபு

67

கிரேக்க நாட்டில் நாடகம் ஒரு தனி முழுக் கலையாய் இயங்கவில்லை. இரண்டு கலைகளாய் இயங்கின என்று அறிகிறோம். இரண்டும் இரண்டு தெய்வங்களின் திருவிழாக்களை ஒட்டி நடைபெற்றன என்றும் தெரிய வருகிறது.

துன்பியல் நாடகம் டயோனிஷஸ் என்ற மலைத் தெய்வத்தின் விழாவில் நடைபெற்றது. இத்தெய்வம் நம் நாட்டுச் சிவபிரானை நினைவூட்டுவது. சிவனையும் காளியையும் போல அஃது உக்கிரமான தெய்வம். அதன் தலை ஒரு ஆட்டுத்தலை. ஆட்டுத்தலை முகமூடியணிந்து புரோகிதராகிய கிரேக்க அரங்கத் தலைவர் டயோனிஷஸாக நடித்து அவர் திருவிளையாடல்களைப் பாட்டாலும் ஆட்டத்தாலும் நடிப்பாலும் விளக்கினர். புரோகிதர் ஆட்டுத் தலையணிந்து நடித்ததாலேயே அது கிரேக்க மொழியில் ஆட்டு நாடகம் (ட்ராஜிடிக்ஸ் - ஆடு) என்ற பெயரை அடைந்தது.

இதில் வீரம், கோபம், சோகம் ஆகிய உணர்ச்சிகள் இடம் பெற்றன. தேவரும் வீரரும் மட்டுமே காட்சி தந்தனர். இன்பம், நகைச்சுவை, சமுதாய வாழ்க்கைப் பின்னணி ஆகியவை இடம்பெறவில்லை.

இன்பியல் நாடகம் பாக்கஸ் அல்லது அப்போலோ என்ற தெய்வத்தின் விழாவில் நடைபெற்றது. இத்தெய்வம் நம் நாட்டின் திருமால் அல்லது காமனை நினைவூட்டுவது. இது குடிதேறலையும், களியாட்டத்தையும் விரும்பும் தெய்வம்.மராத்தி நாட்டுக் கணபதி போன்றும் ஆங்கில நாட்டுப் 'பக்' என்ற நாட்டுப்புறத் தெய்வம் போன்றும் குறும்புக் கோமாளித் தெய்வங்களும் இதில் இடம் பெற்றன. நாடகப் பண்பு இங்கே விரைவில் கோமாளித்தனமும் வசையும் நகைச்சுவையும் கலந்ததாயிற்று.

துன்பியல் நாடகத்தை உயர்குடியினர், செல்வர்களே கண்டு நுகர்ந்தனர். இன்பியல் நாடகத்தையோ பொது மக்கள் தெருக் கூத்தைக் கண்டு களிப்பது போலக் கண்டு ஆரவாரித்துக் களித்தனர்.