பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

87

பட்டவரல்லரானாலும், அவர்களைவிட எவ்வளவோ அவல் நிலையிலேயே வாழ்கின்றனர். கலைகாத்த அம்மரபினர் இன்று தம் நிலைகாக்கவே அலமரும் நிலையில் உள்ளனர். உலகாண்ட மாவலி மரபினர் நிலையும் இன்று தடம் காண முடியா நிலையே யாகும்.

பறையும் முரசும் அறையும் பறையரையும் வள்ளுவரையும் போலவே, துடியரும் துடியடிக்கும் உயர் உரிமைக் குடியினராய் இருந்திருத்தல் கூடும். ஆனால், அவர்களைப்பற்றி நாம் மிகுதி கேள்விப்படவில்லை. நீலகிரியில் வாழும் துதவர் அல்லது தோத வர் பெயரை அவர்கள் பெயர் நினைவூட்டுவதாய் உள்ளது. மலங்குடி மக்களாதலின் அவர்கள் இடைக்காலத்தில் ஒதுங்கி வாழ்ந்து நாகரிக வாய்ப்பற்றுவிட்டனர். அவர்கள் சமுதாயத்தில் தாழ்ந்துவிடாவிட்டாலும், அரசியல் சமுதாய உரிமையும் பண்பாடும் குன்றியுள்ளனர்.

தமிழகக் கடம்பர்

நால்வகைக் குடிகளுள் ஒன்றான கடம்பர் பற்றியும் நாம் தமிழ் வாழ்வில் மிகுதி கேள்விப்படுவதில்லை. ஆனால், கடம்பு என்ற மரப்பெயரை அது நினைவூட்டுகிறது. கடம்பு மரத்தை மரபுச் சின்னமாக உடையவர்களே கடம்பர். பண்டைத் தமிழகத்தில் கடம்பு மரமும், கடம்பரும் மிகுதியாகவே இருந்திருக்க வேண்டும். மதுரையருகிலே முன்பு நாகர் நகரம் இருந்தது போலவே, கடம்பரும் மிகுதியாகவேயிருந்திருக்க வேண்டும். மதுரையே முதலில் கடம்பர் ஆட்சியில் இருந்திருக்கக் கூடும். கடம்பரிடமிருந்து பாண்டியரால் வெல்லப்பட்டு அது கடைச் சங்ககாலப் பாண்டியரின் புதிய தலைநகரமாயிருக்கக் கூடும். ஏனெனில், மதுரையின் கோயில் திருமரம் கடம்பமரம் என்றே அறிகிறோம். மதுரையும் கடம்பவனம் என்றே புராணங்களில் குறிக்கப்படுகிறது. அதன் தலபுராணங்களில் ஒன்றின் பெயரும் கடம்பவன புராணம் என்பதே.

தமிழர் தெய்வங்களுள் முருகனுக்குரிய பூ கடப்பம் பூவே. முருகன் கடம்பன் என்றும் குறிக்கப் பெறுகிறான். உண்மையில் சூரபன்மன் மரபினரான கடம்பரை வென்றே அவன்