94
அப்பாத்துரையம் - 16
பத்தில் இதனுடன் உம்பற்காடு (ஆனைமலைப்பகுதி) வெற்றி, கொங்கு வெற்றி, மேல் கடலிலிருந்து கீழ்கடல்வரை ஆட்சி பரப்பி இருகடலும் ஆள்வதற்கறிகுறியாக இருகடல் நீரும் ஆடியது ஆகியவை சிறப்பிக்கப்படுகின்றன.
கடம்பின் பெருவாயில் போர்
கடம்பின் பெருவாயில் என்பது நன்னன் வேண்மான் ஆண்ட பாலி நாட்டின் ஒரு நகரம். அதுவே நன்னன் தலைநகரமாகவும் இருத்தல் கூடும். இந்நாடு பூழிநாடு அதாவது தற்போதைய தென் கன்னட மாவட்டத்தை அடுத்துள்ள குடகு மாகாணம் ஆகும். செருப்பாழிப் போருக்கு முன்பு அப்பகுதியில் கோசரால் கொல்லப்பட்ட ஒரு நன்னனைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். கடம்பின் பெருவாயில் போரில் ஈடபட்ட மன்னன் அவன் மரபினருள் ஒருவனாகவே இருத்தல் கூடும்.
கடைச் சங்கப் பாடல்களிலே பத்துப்பாட்டில் மலைபடு கடாத்தில் பாடப்படும் நன்னன் வேறு, பதிற்றுப்பத்திற் குறிக்கப்படும் நன்னன் வேறு. முந்தியவன் சோழநாட்டையடுத்த செங்கண்மா நாட்டு நன்னன். பிந்தியவனோ சேரநாட்டு எல்லையிலிருந்த பாலிநாட்டு நன்னன் அல்லது கொண்கானத்து நன்னன் ஆவன். இக்கொண்கானத்து நன்னனைப் பற்றிப் பரணர் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சிலவேனும் செருப்பாழிக் காலத்து நன்னனைக் குறித்தன ஆகும். 'பெண் கொலை புரிந்து நன்னன்' என்று கொண்கானத்து நன்னன் அழைக்கப்படுவதற்குக் காரணமான நிகழ்ச்சியையே ஒரு பாட்டில் அவர் குறிக்கிறார்.
மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு அவள்நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன்.
(குறுந்தொகை 292)
நன்னனின் மாளிகையின் பின்னே ஓடியது ஓர் ஓடையில் மிதந்து வந்த அவன் தோட்டத்துப் பசுங்காய் ஒன்றை ஓர் அறியாச் சிறுமி தின்றுவிட்டாள். அதற்காக அவன் அவளைக்