தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
95
கொலை செய்தான். பெண்ணின் பெற்றோர் அவள் பிழைக்காக யானைகள் பலவும், அவள் எடையின் அளவில் பொற்சிலையும் தருவதாகக் கூறியும், அக்கொடுஞ் செயலிலிருந்து அவன் விலக ஒருப்படவில்லை. இச்செயல் காரணமாகப் பல தலைமுறை களாகத் தமிழ்ப்புலவர் அவனையோ, அவன் மரபினரையோ, உறவினரையோ பாடுவதில்லை, வணங்குவதில்லை என்று சூள் செய்திருந்தனர் என்று அறிகிறோம்.
இந்நன்னன் மரபினர் பாழிக் கோட்டையில் பெரும் பொற்குவை குவித்திருந்தனர் என்றும் பரணர் கூறுகிறார். செருப்பாழிப் போருக்கு உரிய கோட்டை இதுவே ஆகல் வேண்டும்.
கடம்பின்வாயில் போரில் நன்னனை எதிர்த்தவன் பதிற்றுப் பத்தின் நான்காம் பத்திற்குரிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற சேர அரசன் ஆவான். சேரருக்குரிய மணி முடியை அவன் முடிசூட்டு விழாவின்போது பெறமுடியாதிருந்த தனாலேயே அவன் களங்காய் கோத்த நார்முடி அணிந்திருக்க வேண்டுமென்றும், அது காரணமாகவே அப்பெயர் பெற்றானென்றும் உரையாசிரியர் கருதியுள்ளார்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தந்தை சேரல் ஆத னென்றும், தாய் வேளாவிக் கோமான் மகளான பதுமன்தேவி என்றும் பதிற்றுப்பத்து நான்காம்பத்தின் பதிகம் கூறுகிறது. அவன், நீர் கொப்பளிக்கும் நேரி மலையை உடையவன். 25 ஆண்டுகள் ஆட்சி செய்தவன். முன்னும் பின்னும் ஆண்ட சேரர்களைப் போலவே வள்ளன்மை மிக்கவன். நாலாம்பத்தில் அவனைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார். அவருக்கு அவன் அப்பாட்டிற்குரிய பரிசாக நாற்பதினாயிரம் பொற்காசும் நாட்டிற் பாதியும் அளித்தான். புலவர் தன்பாதி அரசையும் அரசனிடமே விட்டு அவனிடம் அமைச்சரானார் என்று அறிகிறோம்.
பிற்பட்ட சங்ககாலத்தில் தகடூரில் அதிகமான் அஞ்சி ஆண்டது பற்றிக் கேள்விப்படுகிறோம். நார்முடிச் சேரலின் காலம் அதற்கு முற்பட்டது. ஆதலால் அப்போது அதிகமான் அஞ்சியின் முன்னோனான நெடுமிடல் என்பவன் ஆட்சி செய்தான். நார்முடிச் சேரல் இந்நெடுமிடலின் இறுமாப்பை அடக்கி