பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் – 16

என்ற அடிகளில் அவன் அஞ்சா நெஞ்சுடன் கடலகம் புகுந்து தன் எதிரிகளுடன் போரிட்ட பரதவன் அல்லது கடல் மறவன் எனப் பராவப்படுகிறான்.

"தாங்கிரும் பரப்பில் கடல் பிறக்கோட்டி"

எனச் சிலப்பதிகாரமும் (காதை 30. கட்டுரை 12) இச்செயல் குறித்துள்ளது.

செங்குட்டுவன் பிற வெற்றிகள்

பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தால் செங்குட்டுவன் தந்தை வடநாட்டினருக்கு அச்சந்தரும் கொடியையுடைய நெடுஞ் சேரலாதன் என்றும், அவன் தாய் சோழன் மகள் மணக்கிள்ளி என்றும் அறிகிறோம். அவன் தாய் கரிகாலன் மகள் நற்சோணை என்று சிலப்பதிகாரம் தரும் செய்தியுடன் இது சிறிது முரண் படுகிறது. ஆனால், இரண்டும் ஒரே இளவரசிக்குரிய பெயர் என்று கொள்ளப்பட்டு வருகிறது.

செங்குட்டுவன் வெற்றிகளுள் ஒன்று, பாண்டிய நாட்டெல்லையிலுள்ள பழையன் மோகூரை அழித்தது ஆகும். பழைய நாட்டெல்லையிலிருந்த அருகன் என்ற தலைவன் செங்குட்டுவனுக்கு இப்போரில் உதவியாயிருந்தான். பழையன் செங்குட்டுவனை எதிர்த்தழித்து விடுவதாக வஞ்சினம் கூறிக்கொண்டு போர்க்கெழுந்தான். இப்போரில் மோகூர் வீழ்ச்சி அடைந்தது. பழையன் காவல் மரமாகிய வேம்பைச் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தி, அவன் யானைகளின் உதவி கொண்டே அதனைத் தன் நாட்டுக்கு இழுந்து வந்தான். அத்துடன் அதைக் கட்டி இழுப்பதற்கு அவன் பழையன் குடும்பத்துப் பெண்டிரின் கூந்தல்களையே அறுத்து வடமாகத் திரித்துப் பயன்படுத்தினான் என்று அறிகிறோம். மோகூர்ப் போரில் பழையனுக்குச் சில வேந்தரும் பல வேளிரும் துணை நின்றதாகத் தெரிகிறது.

தமிழர் வீரத்தோடு கலந்த கறையாகக் கடும்போட்டி உணர்ச்சியும் கொடுமையும் இடம் பெற்று இருந்தன என்பதை இது ஒளிவு மறைவின்றிக் காட்டுகிறது.