பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

அப்பாத்துரையம் - 16

கன்னர் உதவியுடன் சேரப் படைகள் கங்கை கடந்து, வடகரை யிலுள்ள உத்தரை நாட்டையடைந்தனர். குயிலாலுவம் என்ற இடத்தில் கன்னன், விசயன் ஆகிய ஆரிய அரசர்கள் பெரும் படையுடன் தமிழ்ப்படையை வந்து எதிர்த்தனர். இக்கனக விசயர் தலைமையில் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திர சிங்கன்,தனுத்தரன், சுவேதன் ஆகிய பல அரசர்கள் தங்கள் தங்கள் படைகளுடன் வந்து குழுமினர்.

கரையுடைத்த பெரு வெள்ளம் போன்ற ஆரிய அரசரின் படை வரிசைகளைக் கண்ட சேரன் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான். விரைவில் முரசுகள் முழங்கின; சங்கங்கள் இயம்பின; காளங்கள் ஆர்ப்பரித்தன; வில் வீரர்களும், வேல் வீரர்களும் வாள் வீரர்களும் நீடித்து மும்முரமான போரில் ஈடுபட்டார்கள். அமர்க்களத்தின் ஆர்ப்பரிப்பும் அமலையும் காதுகளைச் செவிடுபட வைத்தன. குருதியும் குறையுறுப்புக்களும் பிணக்குவியல்களும் நிலத்தை மறைத்தன. தூசியும் கொடியும் கண்களுக்குத் திசைகளையே மறைக்கும் மறைதிரைகளாயின.

போர்வெறி கொண்ட யானைபோல் சேரன் ஆரிய அரசரின் கடும் படை மாக்களைக் கொன்று களம் குவித்தான். அம்மன்னர் அவன் திசையில் திரும்ப அஞ்சினர். ஆனால், ஆரியர்படை குறையக் குறையத் தமிழ்ப் படை அதைச் சூழ்ந்து நெருங்கிற்று. ஒரு பகல் எல்லைக்குள் அவ்வளவு பெருந்தொகை யான படை வீரர்களைக் கூற்றுவன்கூடக் கொன்று குவிக்க முடியுமா என்று வியந்து ஆரிய அரசர் மலைத்தனர். இறுதியில் படைகளெல்லாம் தோற்றபின் அவர்கள் சிவ வேடம் தவவேடம் பூண்டு ஒளிந்தனர். இளங்கோவின் மொழிகளில்,

“வாய் வாளாண்மையின் வண்தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத்திருவர் கடுந்தேராளரோடு செங்குட்டுவன்தன் சினவலைப்படுதலும் சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர்...

ஆடுகூத்தர் ஆகி எங்கணும் ஏந்துவாள் ஒழிய”

(சிலப், XXvi 221-5, 228 -9)