பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

செங்குட்டுவன் வடதிசை வெற்றியின் சூழல்

107

செங்குட்டுவன் காலத்தில் வட கிழக்கிந்தியாவில் ஆண்ட பேரரசர் மகதத்தை ஆண்ட ஆந்திர மரபினராகிய மகா கர்ணர் ஆவர். இவர்கள் சதகர்ணிகள் என்றும் கூறப்படுவர். இவர்களே சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்ட மகதப் பேரரசர் நூற்றுவர் கன்னர் ஆவர். இவர்கள் வடபெண்ணையாற்றின் கரையிலிருந்து மகாநதி வரையிலுள்ள ஆந்திரப் பேரரசின் எல்லையும், இமயம்வரைப் பரவிய கங்கை வெளியெல்லையும் பர்மாவும் சேர்ந்த மூன்று பேரரசெல்லைகளாகிய முக்கலிங்கத்தையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவர்கள் ஆவர். இத்தகுபெரும்பேரரசர் தமிழக பேரரசன் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவன் ஆர்வ நண்பராயிருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. இது அந்தநாளைய அரசியல் சூழலால் விளங்குகிறது. அவனுக்கு மேல் திசையில் தமிழக நாகரிகத்துக்கு மட்டுமன்றிக் கங்கை நாகரிகத்துக்கும் முற்றிலும் அயலான ஒரு புற உலகப் பேரரசு காந்தாரத்தைத் தலைநகராகக் கொண்டு சிந்து வெளி முழுவதையும் காசுமீரம், ஆப்கனிஸ்தானம், ஆரியா, அரகோசியா, பாக்டிரியா ஆகிய நடு ஆசிய நாடுகளையும் ஆண்டு வந்தது. சகமரபைச் சார்ந்த அதன் அரசர் குடி சிந்துகங்கை வெளி நாகரிகங்களுக்கு எவ்வளவு அயலானது என்பதை அக்குடியின் முதலரசர் பெயர் ‘காட்பீஸ’ஸே காட்டும். ஆனால், அடுத்த அரசன் கனிஷ்கன் புத்தநெறியைத் தழுவியதனாலேயே அரைகுறையாக இந்திய மாநிலப் பண்பாட்டின் போர்வை போர்த்திக் கொண்டு தன் பெயருக்கு இந்தியக் கனவு கண்டான்.

இப்புறப்பகையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டே தமிழினத்தவர் அல்லது திராவிடராகிய வடதிசை ஆந்திரப் பேரரசர் தம் இனத்தவராகிய தமிழருடன் அளவளாவி, தமிழகப் பேரரசன் ஆதரவை நாடினர். ஆந்திரப் பேரரசர் ஆட்சியும் பிற்காலச் சோழப் பெரும் பேரரசர் ஆட்சியுமே வங்கத்தின் நாகரிகத்தைத் தமிழக நாகரிகத்தின் ஒரு நறு நிழலாக்கி. அதை வடதிசையில் ஒரு நாகரிகச் செழும் பண்ணையாகத் திகழச் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

சிலப்பதிகாரத்தில் கனகன் என்று குறிக்கப்படும் அரசன் இந்தச் சகப்பேரரசன் கனிஷ்கனே என்றும், விசயன் என்று