7. சங்காலப் போர்கள் III
சங்க இலக்கியம் ஒரு வரலாற்றுச் சுரங்கம். ஆனால், அது இன்னும் நன்கு அகழ்ந்து பயன் காணப்பெறாத சுரங்கமாகவே உள்ளது. அதன் அறிவு தமிழ்ப் புலவருலகில் செறிந்து கிடக்கின்றது. அதனை ஆராய்வதற்குரிய வரலாற்று வாய்ப்பும் ஆராய்ச்சி வாய்ப்பும் அப்புலவருக்கு எட்டாத அயல் மொழிக் கல்வி நிலையங்களின் ஆராய்ச்சி அரங்கங்களில் இருக்கின்றன. ஆட்சியினத்தின் கலைகளுள் ஒன்றாக வரலாறும், அவற்றின் பண்பாட்சிக் கருவிகளாக சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய அயல் மொழிகளும் இருக்கும்வரை, ஆட்சி நிலையங்களிலும் கல்வி நிலையங்களிலும் தமிழும் தமிழ்ப்புலமைத் துறையும் தாழ்ந்த படிகளிலும் மிகத்தாழ்ந்த கீழ்ப்படியில்தான் இருக்க முடியும். அதேசமயம் வரலாற்றுத் துறையும்
அயல்
மொழித்துறைகளும் தமிழும் தமிழ் பயின்ற தமிழரும் தமிழ்ப் புலமையும் சென்று எட்ட முடியாத உச்ச உயர் படிகளாகவே நிலவும். இவ்விரண்டும் சரிசம நிலையில் உழைத்துச் சங்க இலக்கிய அடிப்படையில் தமிழக வரலாற்றையோ, தமிழக வரலாற்றடிப்படையில் சங்க இலக்கியத்தையோ வகுக்க
முடியாது.
மொத்தமாகச் சங்க இலக்கியத்தின் காலத்தை மதிப்பிடு வதிலேயே தமிழராய்ச்சியாளர் முயற்சிகள் இதுவரை பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்துக்குள்ளேயே கால வரிசை காண முயன்றவர் மிகச் சிலர். இத்துறையில் அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அரும்பெரு முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவர் அடிச்சுவட்டை இதுகாறும் யாரும் பின்பற்றத் துணியவில்லை. இது வியப்புக்குரியது. ஏனெனில் சங்க இலக்கியக் கால வரிசைக்கு வேண்டிய சான்றுகள் எதையும் வெளியே தேட வேண்டிய