பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

அப்பாத்துரையம் - 16

காலைப் பிடித்துக் கெஞ்சினால் இந்நாட்டையும் என்னுயிரையும் கூட என்னால் கொடுக்க முடியும்; எதிர்த்து வந்தாலோ, வந்தவர் புலியை மிதித்த குருடன் ஆவார்கள்; யானைக்காலில் மிதியுண்ட இளமூங்கில் ஆவார்கள்' என்று அவன் கூறுகிறான்.

“மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி

ஈ யென இரக்குவராயின், சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம், இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென்.... உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதில் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல........ கழைதின் யானைகால் அகப்பட்ட

வன்திணி நீள்முளை போல

உய்ந்தனன் பெயர்தலோ அரிதோ!”

(புறம் 73)

-

அவன் ஆட்சியிலும் அவன் பின்னோன் ஆட்சியிலும் சோழரின் அவைப்புலவராய் இருந்தவர் கோவூர்கிழார்.பாணர், விறலியர், கூத்தர், பொருநர் என்ற அந்நாளைய நால்வகைப் பாடகரில், அவர் பொருநர் வகுப்பைச் சேர்ந்தவர். பாணர்- அரசவையில் சென்று மன்னனைப் பாடுவோர். விறலியர் - ஆடல் நங்கையர்.கூத்தர் - நாடகம் ஆடுபவர். பொருநர் - பாசறையிலும் போர்க்களத்திலும் மன்னனுக்கும் வீரருக்கும் எழுச்சியூட்டிப் பாடுபவர்கள்.

நலங்கிள்ளியின் பொருநராய் இருப்பதால் மன்னர் களுக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமக்கே கிடைத்ததாகக் கோவூர்கிழார் ஒரு பாட்டில் நயமாகக் குறிக்கிறார். அவர் முரசறையக் குணில் எடுத்தாலே அரசர் எல்லோரும் நடுங்கினராம்! ஏனெனில், அது நலங்கிள்ளி படையெழுச்சிக்கு அடையாளமாய் இருந்தது!

கோவூர்கிழாரேயன்றி ஆலத்தூர் கிழார், உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்ற புலவர்களும் இவ்வரசனைப் பாடி யுள்ளனர். இவர்கள் அவன் தற்பெருமையை நயமாகச் சுட்டிக் காட்டினர். 'போர் வெறி போதாது; அன்பும் அருளும் அரசர்க்கு அணி' என்று அவர்கள் அவனை இடித்துரைத்து வந்தது குறிப் பிடத்தக்கது.