தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
115
பேரவாவுடைய இந்த அரசனுக்கு அவன் ஆட்சியின் முற்பகுதி முழுவதும் அருகிலேயே எதிர்ப்பு இருந்தது. சோழர் குடியின் இளவரசனான நெடுங்கிள்ளி என்பவன் அவனுக் கெதிராக எழுந்து உறையூர், ஆவூர் ஆகிய நகரங்களைக் கைப்பற்றி ஆண்டு வந்தான். நலங்கிள்ளி பெரும் படைகளுடன் புறப்பட்டுச் சென்று அவனை அடக்கி ஒடுக்க முற்பட்டான்.
நலங்கிள்ளிக்கு மாவளத்தான் என்று ஒரு தம்பி உண்டு. நெடுங்கிள்ளிக்கெதிராகப் போரிலீடுபடும்படி அவனை நலங் கிள்ளி அனுப்பினான். நெடுங்கிள்ளி அச்சமயம் கோவூரிலிருந் தான். மாவளத்தான் அந்நகரை முற்றுகையிட்டான். இம் முற்றுகை பற்றிய இரண்டு செய்திகள் நமக்குத் தெரிகின்றன. முதலாவது இளந்தத்தன் என்ற புலவன் நலங்கிள்ளியைப் பாடிவிட்டு நெடுங்கிள்ளியையும் பாட ஆவூர் வந்தான். அவனை நலங்கிள்ளியின் ஒற்றன் என்றெண்ணி நெடுங்கிள்ளி கொல்ல முற்பட்டான். கோவூர்கிழார் ஓடோடிச் சென்று புலவர்கள் நடு நிலையுரிமையை எடுத்துரைத்து அவனைக் காத்தார் (புறம் 47)
ஆவூர் முற்றுகை நாள் கணக்காக, வாரக் கணக்காக நீடித்தது. நெடுங்கிள்ளி வெளிவந்து போரிடாமல் கோட்டைக் குள்ளேயே அடைபட்டுக்கிடந்தான். இதனால் நகரத்தின் உள்ளிருந்த மக்களுக்கும் உயிரினங்களுக்கும் பெருத்த முட்டுப்பாடு ஏற்பட்டது.கோவூர்கிழார் மீண்டும் நெடுங்கிள்ளியிடம் சென்று வீர அறிவுரை தந்தார். 'வீரமரபில் வந்தவன் நீ, குடிகள் வருந்த இப்படி அடை பட்டுக் கிடப்பது நன்றன்று; போர் புரிய விருப்பம் இருந்தால், ஆண்மையோடு வெளியே வந்து வெற்றி தேடு; இல்லாவிட்டால் நாட்டுக்குரியவனிடம் கோட்டையை விட்டுவிடு' என்றார் (புறம் 44).
நெடுங்கிள்ளி இச்சுடு சொற்களால் உளங்கிளறப் பெற்று வெளியே வந்து போரிட்டான். அவன் தோற்றுவிடவே, ஆவூரைத் துறந்துவிட்டு உறையூர் சென்று தங்கினான். சில நாட்களுக்குள் நலங்கிள்ளி அங்கும் வந்து முற்றுகை தொடங்கினான். நெடுங் கிள்ளி ஆவூரில் நகருக்குள்ளிருந்து நாட்கழித்தது போலவே, உறையூரிலும் நாட்கடத்தினான். இத்தடவை கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறவில்லை. நலங்கிள்ளிக்கே கூறினார்.