பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

117

இரட்டை ஆறுகளில் ஒன்று காளிந்தி என்றும் மற்றொன்று காலேறு என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது பெயர் காரியாறு என்பதன் தெலுங்கு மருஉவேயாகும். காரிமலை என்பது அந்நாள் காளத்தியிலிருந்து திருப்பதி வரை இருந்த மலையைக் குறித்தது. அயிரை மலையிலும் காரி (இராமன் அல்லது திருமால்) அல்லது காரி (கொற்றவை) இடங் கொண்டிருந்திருக்கக் கூடும். காரிநதி என்ற இப்பெயரின் சிதைவே காரிந்தி அல்லது காளிந்தி என்று மருவியிருத்தல் கூடும்.

நெடுங்கிள்ளிக்கு வடபுல வடுக அரசர்கள் உதவியிருந்தனர் என்று எண்ண இடமுண்டு. போர் சோணாட்டின் வட எல்லையில் நடைபெற்றது என்பது இதைக் குறித்துக் காட்டும். நலங்கிள்ளியின் கை ஓங்கி வருவது கண்டு நெடுங்கிள்ளி தன் வழக்கமான மடிமையை அகற்றிவிட்டு மூர்க்கமாகப் போர் புரிந்தான். ஏழு நாட்கள் வரை இருதிறத்தாரும் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காமலே கடும்போர் நடத்தினர். இறுதியில் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் நேருக்கு நேராக நின்று மற்போர் புரிந்தனர். இதன் பயனாக நெடுங்கிள்ளி களத்தில் சாய்ந்தான். பின்னாளில், இப்போர் காரணமாகவே அவன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று குறிக்கப்பட்டான்.

காரியாற்றிலும் அதனையடுத்த தமிழக வட எல்லைப் பகுதியிலும் பின்னாட்களில் மற்றும் பல போர்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தலைமுறையில் காரியாற்றில் மற்றொரு போர் நடந்ததனாலேயே, நாம் இப்போரை முதற் காரியாற்றுப் போர் என்று குறிக்கிறோம்.

நலங்கிள்ளி காரியாற்று வெற்றிக்குப்பின் தன் நாட்டை விரிவுபடுத்துவதில் கருத்துச் செலுத்தினான். பாண்டி நாட்டின்மீது படை எடுத்து அந்நாட்டில் உள்ள ஏழு அரண்களை முற்றுகையிட்டு வென்று கைக்கொண்டான் (புறம் 33). இவனிடம் பெருங்கடற்படை இருந்தது. அத்துடன் அவன் காலத்தில் நிலப்படையும் மிகச் சிறந்த முறையில் மூவணிகளாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது (புறம் 225).