118
|– –
அப்பாத்துரையம் - 16
அவன் நாட்களில் தமிழகத்தில் அறிவியல் (விஞ்ஞானம்) கலைகள் ஆகிய யாவும் நன்கு தழைத்திருந்தன. அந்நாளைய வான நூல் அறிவை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவரும், (புறம் 30) அக்காலக் கடல் வாணிக வளத்தையும், கலைத்துறையில் அல்லியம் என்ற ஊமைக் கூத்து வகையையும் கோவூர்கிழார் என்ற புலவரும் (புறம் 33) குறிப்பிட்டுள்ளார்கள்.
கூடற் பறந்தலை III
மதுரையையடுத்த வெளியிலே நடைபெற்றதாகச் சங்கப் பாடல்களால் நாம் இரண்டு போர்கள் பற்றி அறிகிறோம். அவற்றுள் முதலாவது இன்ன அரசன் காலத்தில் நடைபெற்ற தென்று நம்மால் வரையறுக்க முடியவில்லை. ஆனால், அதனைக் கடைச் சங்கத்தின் முற்பட்ட காலப் புலவர்களுள் ஒருவரான பரணர் பாடுவதாலும் அதில் சேரரும் சோழரும் முறியடிக்கப் பட்டதாகக் கூறப்படுவதாலும், அது கட்டாயம் செங்குட்டுவன் காலத்துக்கு முற்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று கூறலாம். இந்தக் காலத்தில் சேர சோழரே முதன்மை வகித்திருந்ததாக நமக்குத் தெரியவந்தாலும், இக்காலத்துக்கு முன்னும் இடையிலும் பாண்டியன் முதன்மை பெற்ற காலங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பரும்புகழ்ப் பாண்டியனான பல்சாலை முதுகுடுமி இக் காலத்துக்கு முற்பட்ட பழம் பாண்டியனே. தவிர காலவரை யறைப்படுத்த முடியாத பல பாண்டியர் பெயர்களை நாம் சங்க இலக்கியத்தின் மூலம் அறிகிறோம். இப்போர் அவர்களுள் ஏதாவது ஒரு அரசன் காலத்ததாக இருந்திருக்கலாம்.
தவிர, பரணர் சேர சோழர்களைப் பற்றியும், எண்ணற்ற வேளிர்களைப்பற்றியும் பிறநாட்டரசர்களைப்பற்றியும் பாடியிருந்தாலும், பாண்டியரைப் பற்றிக் கிட்டதட்ட எதுவுமே கூறவில்லை என்னலாம். பசும்பூட் பாண்டியன் என்ற ஒரு பாண்டியன் பெயரே அவர் பாடல்களில் இடம் பெறுகிறது. பாண்டிய நாட்டு வேளிர்களுள் ஒருவனான பழயனும் குறிப்பிடப் படுகிறான். பசும்பூட் பாண்டியன் என்ற இப்பெயரைச் சிலர் தலையாலங்கானத்துப் பாண்டியன் என்று கொள்ள எண்ணுவர். ஆனால், பரணர் காலத்துக்கும் காலநிலைக்கும் இது ஒவ்வாதது.