பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

திருக்கோவலூர்ப் போர் 1 : கரூவூர் முற்றுகை

129

தலையாலங்கானத்துப் போரில் பாண்டியனை எதிர்த்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியல்ல; கிள்ளி வளவனாகவே இருக்க வேண்டுமென்று மேலே கூறினோம். கிள்ளிவளவன் வகையிலும் ஆராய்ச்சியாளர் பலவகைப்பட்ட குழப்பங்களை உடையவராய் இருக்கின்றனர். முதலாவது நலங் கிள்ளிக்குப் பின் ஆண்டவன் கிள்ளிவளவன் என்று சிலரும், நலங்கிள்ளிக்கு முன் ஆண்ட அவன் தமையனே கிள்ளிவளவன் என்று சிலரும் கொள்கின்றனர். இரண்டாவதாக இக்குழப்பத் திடையே இன்னொரு குழப்பமாக, கிள்ளிவளவனும் மணிமே கலைக்காப்பியத்துச் சோழன் மாவண் கிள்ளியும் ஒருவனே என்று சிலரும், வேறு வேறு என்று பிறரும் கொள்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் கொள்வது போல, தலையாலங் கானத்துப் பாண்டியனைச் சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப் பின் வந்தவன் என்றும், அவன் பெயரன் என்றும் கொள்வது சரியானால், கிள்ளிவளவன் நலங்கிள்ளிக்குப் பின் ஆண்டவனே என்பதிலும், அவனே மணிமேகலைக் காப்பியத்துக்குரிய மாவண் கிள்ளி என்பதிலும் ஐயமிருக்க

முடியாது.

மற்றும் கிள்ளிவளவனும் பழயன் மாறனும் ஈடுபட்ட கூடற் பறந்தலை இரண்டாம் போர் பற்றிய நக்கீரர் பாடல் (அகம்846) சிலரால் தலையாலங்கானத்துக்குப் பிற்பட்ட போரைக் குறிப் பதாகவும், வேறு சிலர் கொண்டுள்ளனர். அத்துடன் அது பழயன் வெற்றியன்று; கிள்ளிவளவன் வெற்றியே என்றும் அவர்கள் பொருள்படுத்தியுள்ளனர். பாடியவர் நக்கீரர் என்பதையும் பாட்டின் அடை மொழிகளையும் நோக்க, அப்போர் தலையாலங்கானப் போருக்கு முந்தியதென்றும், வெற்றி பழையனதே என்றும் கொள்ளவதே பொருத்த மானதாகத் தோன்றுகிறது. பிந்திய பொருள்கூட கிள்ளிவளவன் ஆட்சிப் போக்குக்கு மாறுபட்டதன்று. ஏனெனில் தலையாலங்கானத்துப் போரால் சேர சோழர் முதன்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, பாண்டியனே பெரும் புகழடைந்தது உண்மையானாலும், ஒரு தலைமுறைக்குள்ளேயே சேரசோழர் மீண்டும் தலையெடுத்து, முதன்மைப் பதவிக்குத் தாமே போட்டியிடுவது காண்கிறோம்.