8. பேரரசுப் போட்டி
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தின் பேரரசு வளர்ச்சிக்குரிய போட்டி தமிழகத்துக்குள்ளேதான் இருந்தது. தமிழகம் கடந்து வேறு புறப் போட்டி இருந்ததில்லை. ஏனெனில் தமிழகத்துடன் ஒத்த, ஒருவேளை தமிழகத்துக்கு அடுத்தபடியான பழமையான புற உலகப் பேரரசுகள் எகிப்திய, ஹித்தைத்திய, அசரிய, சீனப் பேரரசுகளே. இவற்றுடன் தமிழகம் வாணிகம், கலை, நாகரிகம் சார்ந்த நேசத்தொடர்பே கொண்டிருந்தது. ஆனால், நெடியோன் காலத்தில் முதல் முதலாகக் கீழ் திசையில் கடல்கடந்த கடாரத்தின் பேரரசுப் போட்டி எழுந்தது. அதன்பின், கடைச்சங்க காலங்களில், புத்தருக்கு முற்பட்டும் பிற்பட்டும், வடகிழக்கே, ஆந்திர, கலிங்க, மகதப் பேரரசுகள் தொடக்கத்தில் பேரரசுப் போட்டியும், பின் நேசத் தொடர்பும் கொண்டிருந்தன. அந்நாளைய சூழ்நிலையே இந்நேசத் தொடர்புக்குப் பெரிதும் உதவிற்று.
இந்திய மாநிலத்தில் நாகரிகக்கொடி தமிழகத்திலிருந்து கிழக்குக்கரையோரமாகவே படர்ந்து செல்வது காணலாம். இதே பண்பைத் தமிழின மொழிகளின் எல்லையும் காட்டுகிறது. வட மேற்கும் மேற்கும் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் இன்றளவும் படிப்படியாகப் பிற்பட்டேயுள்ளன. இதன் காரணங்களை நாம் நில இயலிலும் வரலாற்றிலுமே காணவேண்டும். பண்படா அயலினங்களின் வரவுக்கு வடமேற்குத் திசை எப்போதும் வாயிலாக இருந்து வந்துள்ளது. கி.பி.150-ல் ஆரியர் அத்திசையி லிருந்து பரவிய நாள்முதல், கி.பி.1500-ல் முகலாயர் அவ்வழி வந்து புகுந்ததுவரை, அவ்வாயில் அயலினப் படையெடுப்புக் களுக்கும், அயலினக் குடியெழுச்சிகளுக்கும் இடையறாத பாதையாகவே நிலவியுள்ளது. இத்தாக்குதல்கள் நேர் கிழக்காகவும் தென் கிழக்காகவும் தெற்காகவும் பரந்தன. வடமேற்கும் வடக்கும்