154
அப்பாத்துரையம் - 16
பல்லவர்கள் சேர சோழ பாண்டியரைப் போலவே நல்ல கடற்படை உடையவராய் இருந்தனர். வெளிநாட்டு வாணிகம், குடியேற்றம், வெளிநாட்டுக் கல்வெட்டுக்கள் ஆகியவற்றில் முத்தமிழ் அரசர் பெயர்களும் நாட்டுப் பெயர்களும் அடிபடுவது போலவே, பல்லவ அரசர் பெயரும் குடிகள் பெயரும் மிகுதி இடம் பெற்றுள்ளன.
மானவர்மன் தோல்வி பற்றிக் கேள்விப்பட்ட நரசிம்மன் ஒருபெரிய கடற்படையை இலங்கைக்கு அனுப்பினான். கடல் தள ஆதரவு பெற்ற இப்படை மானவர்மன் எதிரியாகிய அட்ட தத்தனைப் போரில் முறியடித்துக்கொன்று, மானவர்மனை அரசனாக்கிற்று என்று அறிகிறோம்.
பெரும்புகழ்ப் பல்லவர்
பல்லவர்களில் மிகப் பெரும்புகழ் பெற்றவர்கள் முதலாம் மகேந்திரனும் முதலாம் நரசிம்மவர்மனுமே ஆவர். நரசிம்ம வர்மனுக்கு மாமல்லன் என்று ஒரு பட்டப் பெயரும் உண்டு. மாமல்ல புரத்தில் கடற்கரைக் கோயில்கள் மகேந்திரன் காலத்தில் தொடங்கப்பட்டாலும் இவன் காலத்திலேயே முடிவுற்றன. அதன் துறைமுகத்தையும் அவன் செப்பம் செய்து, அதையே தன் பேரரசின் தலைமைத் துறைமுகமாக்கினான். அவன் கடற் படைத்தளமாக இருந்தது அதுவே. இலங்கைப் படையெடுப்பு அங்கிருந்தே தொடங்கிற்று. அவன்பட்டப்பெயராகிய மாமல்லன் என்பதிலிருந்தே மாமல்லபுரம் அப்பெயர் பெற்றதெனப் பல வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். ஆனால், சங்க இலக்கியங்களிலே இத்துறைமுகப் பட்டினம் கடல் மல்லை எனக் குறிக்கப்படுகிறது. சங்க இலக்கியமே பல்லவர்களுக்குப் பிற்பட்டது என்று கூறுபவர் கூற்றுடன்கூட இது ஒத்துவராத செய்தி. ஏனெனில் அவர்கள் கூட ச் சங்ககாலம் சிம்மவிஷ்ணுவுக்கு முற்பட்ட காஞ்சி இழந்த பல்லவர்களுக்கே பிற் பட்டதென்பர். எனவே மல்லைக்கு அழகும் பெருமையும் உண்டு பண்ணி 'மாமல்லை' ஆக்கியவன் என்ற முறையிலேயே நரசிம்மவர்ம பல்லவன் ‘மாமல்லன்' என்ற புகழ் பெயர் பெற்றான்
என்னலாம்.