தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
157
தேவாரத்தாலும், பெரிய புராணத்தாலும் சிவநெறித் திருத் தொண்டர் அறுபத்து மூவருள் ஒருவராகப் பாடப்பட்ட நின்ற சீர் நெடுமாறன், இந்த அரிகேசரி மாறவர்மனே என்பதும் உறுதி. முதல் மகேந்திரவர்ம பல்லவனைச் சமண நெறியிலிருந்து திரு நாவுக்கரசர் சிவ நெறிக்கு மாற்றியருளியதுே பால, இந்தப் பாண்டியனையும் அதே காலத்தை அடுத்து வாழ்ந்த திருஞான சம்பந்தர் சிவ நெறிக்கு மாற்றியதாக அறிகிறோம். இவன் அரசி பாண்டி மாதேவி என்றும் சோழன் மகளாதலால் வளவர்கோன் பாவை என்றும் பாட்டில் பாராட்டப் பெற்றுள்ளார். அரசியாரும் அமைச்சராகிய குலச்சிறையாரும் அரசனைச் சிவநெறிக்குக் கொண்டுவர உதவினதனால், அவர்களும் அறுபத்து மூவருள்
டம்பெற்றுள்ளனர்.
சாளுக்கிய - பல்லவ - பாண்டியப் போட்டி: நெல்வேலிப் போர் கி.பி. 675
திருத்தொண்டத் தொகைபாடிய சுந்தரமூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்தவர். அரிகேசரி கொண்ட நெல்வேலிப் போர் வெற்றியின் புகழ் அவர் காலம் வரை பேரொளி வீசியிருந்தது என்பதை அவர் பாடல் காட்டுகிறது. நூறு ஆண்டுகள் கழித்தும் அவன் தலைசிறந்த பெருஞ்செயலாக அவர் அதையே குறிக்கிறார்.
“நிறைகொண்ட சிந்தையால் நெல்வேலிகொண்ட
நின்ற சீர்நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்!”
இப்போர் மன்னனுக்கு வீரப்புகழ் மட்டுமே தருவதாயிருந் தால், சமயவாணராகிய நாயனார் இது ஒன்றையே அவன் பெரும் புகழாகப் பாடியிருக்க மாட்டார் என்று துணிந்து கூறலாம். அது சமயம், மொழி, நாடு ஆகிய மூன்றும் காத்த தேசீயப் போராகவே நாயனார் கண்ணிலும், அவர் காலத்தவர் கண்ணிலும் தோன்றியிருக்க வேண்டும். சுந்தரமூர்த்தி நாயனார் காலம் நெடுமாறன் காலத்திலிருந்து மிகவும் மாறுபட்டதல்ல என்பதும், பல்லவர் பாண்டியப் போட்டி அக்காலத்திலும் ஓய்வுற்று விடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.