பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

159

வாதாபி அழிவால் சாளுக்கிய மரபுக்கு ஏற்பட்ட திண்ணிய கறையைப் புதுவெற்றிகளால் போக்க, வீரனான விக்கிரமாதித்தன் துடித்தான். ஆனால், வீரத்தில் தந்தைக்குப் பிற்படாத விக்கிர மாதித்தன் விவேகத்தில் பிற்பட்டுவிட்டான் என்று கூற வேண்டும். புலிகேசியைப் போல அவன் பல்லவருக்கெதிராகப் பாண்டிய சேர சோழர் கங்கர் உதவி திரட்டத் தவறினான். தன் வலிமையிலேயே செருக்கியவனாய்க் கடல் போன்ற தானைகளுடன் பல்லவநாட்டில் காட்டாறுபோல் பாய்ந்து சூறாவளி போல் சுழன்றடித்தான். பின் தமிழக முழுவதிலும் தன் புகழ் நாட்ட எண்ணி, பல்லவப் பேரரசின் எல்லை கடந்து சோழ நாட்டில் புகமுனைந்தான்.

பல்லவனை மட்டுமன்றித் தமிழரசர்கள் அனைவரையுமே துச்சமாக மதித்த விக்கிரமாதித்தன் மீது, பாண்டியன் அரிகேசரி நெடுமாறன் கொதிப்படைந்தான். அவன் மீது தன் பேரரசுப் படைகளுடனும் சோழர் துணைப்படைகளுடனும் சீறிப் பாய்ந் தான். இதன் விளைவாக ஏற்பட்டதே நெல்வேலிப் போரின் மங்காப் புகழ் வெற்றி! அடங்கொண்டு தமிழகத்தில் புகுந்த விக்கிரமாதித்தன் வெற்றியெழுச்சிக்கு இது முற்றுப் புள்ளி வைத்தது. அவன் முன்வைத்த காலைப் பின்வைத்து மீட்டும் பல்லவ எல்லை கடந்து தன் பேரரசுக்கு ஓடமுனைந்தான்.

சாளுக்கிய வெற்றிகளால் திகிலடைந்திருந்த பல்லவன் இப்போது அவனைத் தன் எல்லையில் மீட்டும் முறியடிக்க நல்ல வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தின் தென்திசைப் பேரரசு தமிழர் என்ற பொது உணர்ச்சியினால் உந்தப்பட்டுத் தன் அணிமை எதிரியான பல்லவப் பேரரசின் எதிரியை முறியடித்து அதற்கு வலுத்தந்தது.

இவ்வெற்றி பாண்டியன் ஒருவனுடைய வெற்றியன்று; தமிழ் மன்னர் அனைவரின் வெற்றி என்பதைச் சாளுக்கியரின் கேந்தூர்ப்பட்டயம் சுட்டிக் காட்டுகிறது. தமிழ் மன்னர் அனைவருமே கூடப் போரிட்ட போர்கள் பல -இது அத்தகைய முதற்போரும் அல்ல, இறுதிப்போரும் அல்ல; ஆனால், பாண்டியர் தலைமையில் தமிழர் ஒன்றுபட்ட வெற்றிப் போர்களில் இது முதல் போர் ஆகும்.