9. சோழப் பெரும் பேரரசு
தென்னக வரலாற்றிலே சங்க காலத்துடன் போட்டியிட வல்ல காலம் ஒன்று உண்டு. அதுவே சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக்காலம். அரசியல் துறையில் அது சங்ககாலம் கடந்து பெருவெற்றி கண்டது. ஆனால், வாழ்க்கைத் துறையில் அது சங்ககாலத்தார் பண்பையோ, இனவளத்தையோ சென்றெட்ட வில்லை. இலக்கிய வகையில், பண்பிலும் வளத்திலும் அது குறைபட நேர்ந்தாலும், வீறமைதிமிக்க அகலக் கவிதையளவில் அது புது நிலமும், புது மலர்ச்சியும் கண்டது.
தமிழக நாகரிகமும், தேசிய வாழ்வும் பின்னோக்கிய தளர்ச்சி யல்ல, முன்னோக்கிய வளர்ச்சியே என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது. தளர்ச்சிக் கூறுகள், வளர்ச்சிக் கூறுகள் அதில் தொன்று தொட்டே உண்டு. அயல் பண்புகள் சில சமயம் அதன் தளர்ச்சிக் கூறுகளை வலியுறுத்தின; சில சமயம் அவை வளர்ச்சிக் கூறுகளை ஊக்கின; இவற்றிடையே அது தளர்ச்சி, மறு மலர்ச்சி, புது மலர்ச்சி ஆகிய மூவகை அலை எதிர் அலைகளாக விழுந்தெழுந்து கிளர்ந்து செல்கிறது என்னலாம்.
அரசியல் துறையில் பேரரசு நோக்கிய வளர்ச்சியலைகளை நாம் கிட்டத்தட்டத் தொடக்கத்திலிருந்தே காண்கிறோம். கடைச் சங்கத்துக்கு முன்னும் கடைச்சங்க காலத்திலும் வீறார்ந்த பேரரசர் இமய எல்லையும், ஈழ எல்லையும், கடார எல்லையும் காண அவாவியிருந்தனர். அதே அவாவும் அதே அளவில் முனைத் தெழுந்த செயலும் சோழப் பெரும் பேரரசர் காலத்தில் மீண்டும் உச்சநிலை அடைந்தன. அத்துடன் சங்க காலத்தின் மறு மலர்ச்சியுடன் அது அமைந்து நின்று விடவில்லை; அதுகடந்து புது மலர்ச்சியாகவும் பொங்கிப் பொதுளிற்று.