202
|– –
அப்பாத்துரையம் - 16
சங்ககால அரசியல் வாழ்வின் மூன்று குறைபாடுகள்
சங்ககாலப் பேரரசு வளர்ச்சியில் நாம் மூன்று குறைகளைக் காணமுடியும். சோழப் பெரும் பேரரசர் காலம் அம் மூன்றையுமே தவிர்த்துள்ளது.
முதலாவதாக, சங்ககாலப் பேரரசுப் பண்பில் இயல்பாக வளம் இருந்தது. ஆனால், உள்ளார்ந்த ஏதோ ஒரு தளர்ச்சிக் கூறு காரணமாக, அந்த வளம் உண்மையான வளமாகச் செயலாற்ற வில்லை, வளரவில்லை, சங்ககாலப் பேரரசுப் போக்கில் இதைக் காணலாம். நெடியோன் கண்ட பேரரசு எல்லையைப் பார்க்கிலும் கரிகாலன் எல்லை குறைபட்டது; கரிகாலன் எல்லையையும் செங்குட்டுவன் எல்லை சென்றெட்டவில்லை; செங்குட்டுவனுக்குப் பின்னோ அது தமிழகத்தின் எல்லைக் குள்ளேயே மேலும் குறுக்கம் அடைந்தது. இறுதியில் அரசியல் அமைதியற்ற ஒரு களப்பிரர் எழுச்சிக்கு அது வழிவிட்டு, அதனால் சீர்குலைவு எய்திற்று.
மேலும், நெடியோன் வெற்றிகள் தவிர, மற்றச் சங்க காலப் பேரரசுகள், பேரரசுகள் என்ற பெயரால் நாம் உணரும் நேரடி ஆட்சிகளாய் இருந்தன என்று கூறுவதற்கில்லை. வீரப் புகழ் வேட்டை, மேலுரிமை யாட்சி, தற்காலிகத் திறையிறுப்பு, வீர உலா ஆகிய அளவிலேயே அவற்றில் பலவும் அமைந்திருக்கக் கூடும் இதனாலேயே அவை நிலையான மரபு காணவில்லை.
வளம்
அந்நாட்களில் பேரரசரும் முடியரசரும் மற்றப் பேரரசர், முடியரசரை வெல்வதற்கு எவ்வளவு சிறப்பு இருந்ததோ, அதே அளவு சிறப்பு அவர்கள் குடியரசரை வெல்வதற்கும் இருந்தது. வீரம் வண்மை ஆகிய இரு பண்புகளிலும் பேரரசர், முடியரசர், குடியரசர் ஆகியவர்களிடையே மக்களோ, புலவர்களோ எந்த வேறுபாடும் காணவில்லை. வீர மிக்கவர், பண்பு மிக்கவர் எந்நிலையினராயினும் உச்சி மேற்கொண்டு போற்றப்பட்டனர். பழைமையான உரிமைப் பேரரசர்களான மூவருக்கும் ஒத்த உணர்மதிப்பு இருந்தது. ஆனால், பாசம் குடியரசர் பக்கமே இருந்ததெனக் கருதுவதற்கு இடமுண்டு.
இது நல்ல குடியாட்சிப் பண்பாயிருக்கலாம். ஆனால், வீரப்போட்டியும் புகழ் வேட்டையும் குடியாட்சியைக் கெடுத்தன.