தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(203
அதே சமயம் பேரரசர் செயல்கள் மக்கள் வேடிக்கைக் காட்சி யாகவே இருந்தன. அவை அவர்கள் இன உணர்வைத் தட்டி எழுப்பவில்லை; ஒற்றுமையை வளர்க்கவில்லை; சீட்டுக்கட்டுகளால் வீடுகட்டிக் கட்டி அழித்து விளையாடும் பிள்ளைகளின் விளை யாட்டுக்கள் போல, அவற்றின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் தமிழர் வீர விளையாட்டுக்களாய் இருந்தன.
இக்காரணத்தாலேயே சங்க காலத்தில் பேரரசர்களின் அருகில் முடியரசுகளும், முடியரசுகளின் அருகிலே குடியரசு களும் இருந்து டைவிடாப் போட்டியில் முனைவது காண்கிறோம்.
இறுதியாக அந்நாளைய பேரரசுகளுக்கும் வெற்றி களுக்கும் இலக்கியச் சான்றுகள் தவிர, வேறுபுறச் சான்றுகள் கிட்டவில்லை. தமிழிலக்கியத்தின் தனிச்சிறப்பை எளிதில் அறியாத இந்நாளைய உலகில் வரலாற்றாராய்ச்சியாளர் முதலில் அவற்றின் மெய்ம்மையையே ஏற்கமறுத்தனர். கிரேக்க உரோமச் சான்றுகள் இருந்திரா விட்டால், சங்ககால மென்ற ஒன்று இருந்தது என்பதையே அவர்கள் நம்ப மறுத்திருப்பர். ஆனால், சங்க இலக்கியச் சான்றின் மதிப்பு உணரப்பட்ட பின்பும், புறச்சான்றுகள் இல்லாக் குறை சிறிதன்று; வரலாற்றுச் சய்திகளை ஒழுங்குபடுத்தவும், உறுதிப்படுத்தவும் அவை இன்றியமையாதவையே.
புறச்சான்றுகள் இல்லாததற்கும் இலக்கியச் சான்றுகளே வளமிழந்து, மரபிழந்து போவதற்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். சங்க காலத்தில் தேசியப் பண்பு வேறெக் காலத்தையும் வேறு எந்த உலகப் பகுதியையும்விட வளமாய் இருந்தது. ஆனால், தேசியக் குறிக்கோள் நாகரிக உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்தக் காலத்திலும் இருந்ததைக் காட்டிலும் குறைவு. இதனால் ஒரே புலவர் இரண்டு அரசரை, சில சமயம் இருதரப்பு அரசரையும் பாடமுடிந்தது. பாடியது பண்பையே யன்றி, ஆளையன்று என்பது உணரப்பட்டது. ஆனால், உலகை ஒரு குடைக் கீழ் ஆளுதல், பொதுவற ஒரு மொழி வைத்து உலகாளுதல் என்பவை அழகு வாய்ந்த புகழ் குறிக்கோள் களாகவே இருந்தன. தமிழ் உலகம் ஒரு குடைக்கீழ் ஆகவேண்டும் என்ற செயற் குறிக்கோள் அல்லது மக்கட் சார்பான தேசியக் குறிக்கோள் இருந்த தில்லை.